உதகை, நவ.2- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக உதகை நகராட்சிக்குட்பட்ட பழைய உதகை போலீஸ் லைன் பின்புறமுள்ள நடை பாதை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த பாதையை பயன்படுத்திவந்த பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெய்த கனமழை யின் போது இப்பாதையில் பிளவு ஏற்பட்டது. அப்போதே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து முறையிட்டோம். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், தற்சமயம் பெய்த கனமழைக்கு நடை பாதை முழுவதும் சேதமடைந்து விட்டது. மேலும் பாதாளச் சாக்கடையின் குழாய்கள் அனைத்தும் உடைந்து விட்டதால் கழிவு நீர் முழு வதும் கசிந்து இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசு கிறது. எனவே அதிகாரிகள் உடனே தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடை பாதை மற்றும் பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.