1065 - இங்கிலாந்து அரசர் எட்வர்ட் கட்டிய வெஸ்ட்-மின்ஸ்ட்டர் ஆபி(மடம்) அர்ப்பணிக்கப்பட்டது. ஒரே வாரத்தில், ஜனவரி 5இல் இறந்த அவர் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டது. இந்த மடம் 960களில் பெனடிக்டிய துறவிகளால் தொடங்கப்பட்டது. தேம்சின் மீனவர்களில் ஒருவருக்கு புனித பீட்டர் காட்சியளித்ததால் இது தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த புனித பீட்டர் மடத்தை, தனக்காக அரச மயானம் தேவையென்று, அரசர் எட்வர்ட், ஐரோப்பாவின் இடைக்கால கட்டிடக்கலை வடிவமான ரோமனெஸ்க் முறையில் 1040களில் மறுகட்டுமானம் செய்யத்தொடங்கினார். வெஸ்ட்-மின்ஸ்ட்டர் ஆபி என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், இதன் பெயர் ‘காலேஜியேட் சர்ச் ஆஃப் செயிண்ட் பீட்டர்’ என்பதாகும். கொலிஜியம் என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவான காலேஜ் என்ற சொல், கிறித்தவ மதச் சட்டத்தில் துறவிகள் குழுவையும், காலேஜியேட் சர்ச் என்பது அவ்வாறான குழுவால் நிர்வகிக்கப்படும் தேவாலயத்தையும் குறிக்கின்றன.
கிறித்தவத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட குழுக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட மோனாஸ்டெரியம் என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவான மின்ஸ்ட்டர் என்ற பெயர், குறிப்பிட்ட தேவாலயங்களைக் கவுரவிக்க அளிக்கப்பட்டு, பின்னாளில் காலேஜியேட், கதீட்ரல்(பேராலயம்) ஆகிய சர்ச்களைக் குறிக்கும் சொல்லாகியது. வெஸ்ட்-மின்ஸ்ட்டர்போல ஈஸ்ட்-மின்ஸ்ட்டர் உட்பட பல மின்ஸ்ட்டர்கள் இங்கிலாந்தில் உள்ளன. 1550களில் வெஸ்ட்-மின்ஸ்ட்டர் மறைமாவட்டம் கலைக்கப்பட்டு, லண்டன் மறைமாவட்டம் உருவானபோது, (புனித பீட்டர் தேவாலயமான)வெஸ்ட்-மின்ஸ்ட்டருக்குரிய நிதி, புனித பால் பேராலயத்துக்கு வழங்கப்பட்டதால், ‘ராபிங் பீட்டர் டு பே பால்’ என்ற (பழைய) சொற்றொடர் புகழடைந்தது. கிறித்தவ மதத்தலைமைக்குக் கட்டுப்பட்தாக அன்றி, அரசுக்கு கட்டுப்பட்டது என்பதற்கான ‘ராயல் பெக்யூலியர்’ என்ற தகுதியை, அரசி எலிசபெத் 1560இல் இதற்கு வழங்கினார். இரண்டாம் உலகப்போரின்போது, இதன் பொருட்கள் இடம் மாற்றப்பட்டதுடன், கட்டிடங்களைப் பாதுகாக்க அறுபதாயிரம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. 39 முடிசூட்டு விழாக்களும், 16 அரச திருமணங்களும் இங்கு நடைபெற்றுள்ளன. பதினேழு அரசர், அரசிகள், நியூட்டன், டார்வின் உள்ளிட்ட முக்கியமானவர்கள் என்று சுமார் 3,300 பேர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏழ்மையிலிருந்ததால், இங்கு ஆறடி நிலத்திற்குரிய கட்டணம் செலுத்த முடியாமல், 18 சதுர அங்குலங்களுக்குக் கட்டணம் செலுத்தியவராகக் குறிப்பிடப்படும் ஆங்கிலக் கவிஞர் பென் ஜான்சன் நின்ற நிலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்!
- அறிவுக்கடல்