1977 - உலகின் முதல் ஜிபிஎஸ் சமிக்ஞை, என்டிஎஸ்(நேவிகேஷன் டெக்னாலஜி சாட்டிலைட்)-2 என்ற துணைக்கோளிலிருந்து பெறப்பட்டது. இடங்களை அடையாளம் காணும் முயற்சி, இரண்டாம் உலகப்போரின்போது, விமானத்திலிருந்து தாக்கவேண்டிய இலக்குகளை அடையாளம் காண்பதற்காகவே தொடங்கியது. 200 மைல் தொலைவிலுள்ள இலக்கினை, 1000 அடிக்குள்ளான வித்தியாசத்துடன் துல்லியமாகத் தாக்குவதற்கு உதவ ப்ராஜெக்ட்-3 என்ற திட்டத்தை, அமெரிக்க ராணுவம் 1940இல் தொடங்கியது. ராடார் போன்ற கருவிகளில் ஏற்கெனவே பயன்பாட்டிலிருந்த ரேடியோ நேவிகேஷன் என்ற முறையைப் பயன்படுத்தி, 1942இல் லோரான்(லாங் ரேஞ்ச் நேவிகேஷன்) உருவாக்கப்பட்டது.
விமானங்கள் தங்கள் இருப்பிடத்தைக் கணிக்க உதவும் டெக்கா நேவிகேஷன் சிஸ்டம் என்பது, இதே ரேடியோ நேவிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இங்கிலாந்தின் டெக்கா ரெக்கார்ட் கம்பெனியால் 1944இல் உருவாக்கப்பட்டது. சார்பியல் கொள்கைப்படி, புவியீர்ப்பு விசையால் நேரத்தில் ஏற்படும் மாறுபாடு, புவியைச் சுற்றும் பொருட்களின் இடத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தும் என்று ஃப்ரீட்வார்ட் விண்ட்டர்பர்க் 1955இல் அறிவித்தார். 1957இல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1 சோவியத் ஒன்றியத்தால் ஏவப்பட்டது. டாப்ளர் விளைவைக்கொண்டு, இச் செயற்கைக்கோளின் இருப்பிடத்தைக் கணிக்கமுடியும் என்று வில்லியம் கூயர், ஜார்ஜ் வெய்ஃபென்பேக் என்ற அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இங்கிருந்து செயற்கைக்கோளின் இடத்தைக் கணிக்க முடியும்போது, செயற்கைக்கோளின் இடத்தைக்கொண்டு, நம் இடத்தைக் கணிக்க முடியுமா என்று ஆராயுமாறு அவர்களை பாதுகாப்புத்துறை கேட்டுக்கொண்டது.
5 செயற்கைக்கோள்களின் இடத்தைப் பயன்படுத்தி புவியில் இடத்தைக் கணிக்கும் ட்ரான்சிட் 1960இல் உருவாக்கப்பட்டது. சார்பியல் கொள்கைப்படியான நேர வேறுபாட்டைக் கணக்கிட, கடிகாரத்துடன்கூடிய டைமேஷன் செயற்கைக்கோளை 1967 இல் அமெரிக்கக் கடற்படை உருவாக்கியது. 1970களின் தொடக்கத்தில் ஒமேகா நேவிகேஷன் சிஸ்டம் உருவானது. அணுக்கடிகாரங்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்கள்மூலம் துல்லியம் அதிகரிக்கப்பட்டாலும், பனிப்போர்க் காலத்தில் இதனை ராணுவ வசதியாக, மிக ரகசியமாக வைத்திருந்தது அமெரிக்கா. 1983இல் சோவியத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த கொரிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இச்சேவைகள் வழங்கப்பட்டாலும், 2000வரை முழுத்துல்லியத்துடன் வழங்கப்படவில்லை. தற்போது, 11.8 அங்குலத் துல்லியத்துடன் எந்த இடத்தையும் அடையாளப்படுத்துமளவுக்கு இத்தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது.