1774 - ‘சகித்துக்கொள்ள முடியாத சட்டங்கள்’ அமெரிக்க வரலாற்றில் குறிப்பிடப்படுகிற சட்டங்களுள் ஒன்றான ‘படை தங்கல்(க்வார்ட்டரிங்) சட்டம்’ இங்கிலாந்துப் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஏழாண்டுப்போரின் முடிவில் இங்கிலாந்தின் நிதிநிலை மிகமோசமாக இருந்தது. ஏழாண்டுப்போரின் ஒருபகுதியாகக் குறிப்பிடப்பட்டாலும், வடஅமெரிக்காவில் நடைபெற்ற பிரெஞ்சு, இந்தியப் போர் 1954இலேயே தொடங்கிவிட்டது. இங்கிலாந்துக் குடியேற்றங்களில் சுமார் 20 லட்சம்பேர் இருந்த நிலையில், வெறும் அறுபதாயிரமாக இருந்த பிரெஞ்சுக்காரர்கள், செவ்விந்தியர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது. நிதிநெருக்கடியிலிருந்த இங்கிலாந்து, குடியேற்றங்களின்மீது வரிவிதித்ததற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளில் ‘விடுதலையின் மைந்தர்கள்’ என்ற ரகசிய அமைப்பு குறிப்பிடத்தக்கது. ‘பாஸ்டன் தேனீர் விருந்து’ போராட்டம் நடைபெற இவ்வமைப்பு முக்கியக் காரணமாக இருந்ததால், பாஸ்டன் இருந்த மாசாசூசெட்ஸ் குடியேற்றத்திலிருந்தவர்களை ஒடுக்குவதன்மூலம், மற்ற குடியேற்றங்களையும் அச்சப்படுத்தி அடக்கிவைப்பதற்காக இயற்றப்பட்டவையே இச்சட்டங்கள். இவற்றில் ‘பாஸ்டன் துறைமுகச் சட்டம்’, பாஸ்டன் தேனீர் விருந்தில் அழிக்கப்பட்ட தேயிலைக்கான விலையைச் செலுத்தும்வரை, பாஸ்டன் துறைமுகத்தை மூடுவதாக அறிவித்தது. ‘மாசாசூசெட்ஸ் அரசுச் சட்டம்’, அக்குடியேற்றத்தின் அதிகாரங்களனைத்தையும்(நிர்வாக அவை கூடுவது உட்பட) பறித்தது. ‘நீதி நிர்வாகச் சட்டம்’, போராட்டக்காரர்களை, (உலகம் முழுவதும் பரவியிருந்த) இங்கிலாந்துப் பேரரசின் எந்த நாட்டிலும் விசாரிக்க வழிசெய்தது. இச்சட்டத்தை ஜார்ஜ் வாஷிங்டன் படுகொலைச் சட்டம் என்று வருணித்தார். இறுதியாக, அமெரிக்காவிலிருந்த இங்கிலாந்து வீரர்களுக்குப் போதுமான தங்குமிடங்கள் இல்லாவிட்டால், எங்கு வேண்டுமானாலும்(பொதுமக்களின் வீடுகளில்கூட!) தங்கிக்கொள்ள அதிகாரமளித்த ‘க்வார்ட்டரிங் சட்டம்’, அனைத்து மக்களையும் எதிர்க்கச்செய்தது. ஒருபுறம், போராடாதவர்களையும் இச்சட்டங்கள் பழிவாங்கியதாக மக்கள் வருத்தமுற்றனர். மறுபுறம், அனைத்துக் குடியேற்றங்களும் அச்சமுற்று கட்டுப்பாட்டிலிருக்கும் என்று இங்கிலாந்து எதிர்பார்த்ததற்கு மாறாக, எல்லாக் குடியேற்றங்களுக்கும் போராட்டம் பரவியது. போராட்டத்தை ஒருங்கிணைக்க 1774 செப்டம்பரில், (அமெரிக்க) கண்டத்தின் முதல் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. 1775 ஏப்ரலில் அமெரிக்க புரட்சிப் போராக வெடித்ததுடன், 1776 ஜூலையில், அமெரிக்காவின் ஐக்கிய மாநிலங்கள் என்ற நாடாக விடுதலை பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.