புதுதில்லி,மார்ச் 27- உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜி-20 நாடுகள் தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் காணொலிக்காட்சி மூலம் வெள்ளியன்று நடைபெற்றது. இதற்கு சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையேற்றார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மருத்துவ ஆய்வுகள், மருத்துவ தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். கொரோனா போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. அனைத்து மக்களுக்கும் நியாயமான கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்ய வேண்டும். லாப நோக்கை மறந்து மக்களின் நலன்களை முதன்மையாக்கிக் கொள்ளுமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார். கொரோனாவிற்கு பலியானவர்களில் 88 சதவீதம் பேர் ஜி 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதையும் மோடி சுட்டிக் காட்டினார். இந்த மாநாட்டில் ஐஎம்எப், ஐநா.சபை, மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்களும் பங்கேற்றனர். சுமார் 5 லட்சம் கோடி டாலர் நிதியை கொரோனாவுக்கு எதிரான யுத்தத்திற்காகவும் உலகப் பொருளாதார சீரமைப்புக்காகவும் அளிக்க ஜி- 20 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.