tamilnadu

img

உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி வரையறை ஆலோசனை கூட்டம் அவமதித்த ஆட்சியர்- அரசியல் கட்சியினர் வெளிநடப்பு

நாமக்கல், மே 4- நாமக்கல்லில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி வரையறை தொடர்பானஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீடீரெனகூட்டத்திலிருந்து வெளியேறியதால் அரசியல் கட்சியினரும் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி வரையறை குறித்து அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. அப்போது, உள்ளாட்சித்தேர்தலுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் சம்பந்தமான பட்டியல்கள் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறினார். இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்குச்சாவடி பட்டியலுக்கான பட்டியலில் எதுவும் எங்களிடம் வழங்கப்படவில்லை என்றும், இந்தப்பட்டியல்எங்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே வழங்கிருந்தால் இதனை ஆராய்ந்து தற்போது அதன் மீது கருத்து கூறியிருக்க முடியும் என தெரிவித்தனர். இதையடுத்து இருக்கையில் இருந்து எழுந்த மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் எந்த ஒரு பதிலும் கூறாமல் கூட்ட அரங்கை விட்டு தீடீரென வெளியேறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சியினர் மாவட்ட ஆட்சியரின் செயலை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் பி.தங்கமணி கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தல் தயாரிப்பு சம்பந்தமான வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியல் அந்தந்த ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும்அதைப் பார்த்து கருத்து கூறலாம்என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்தப் பட்டியல் எங்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே கிடைத்திருந்தால் இதனைப் படித்துவிட்டு இதன் மீதுகருத்து கூற முடியும் என தெரிவித்தோம். ஆனால், இதுதொடர்பாக ஆட்சியர் எதுவும் கூறாமல் தீடீரென எழுந்து கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும், கூட்டத்தில் பங்கேற்ற உதவி தேர்தல் அதிகாரியும் இதையே கூறுகிறார். அதேநேரம், எப்போது கருத்து கூற வேண்டும் என்று கேட்டதற்கு இன்று மாலைக்குள் கருத்து கூறவேண்டும் என்கின்றனர். இதுசாத்தியமல்ல. ஏனெனில், வெளியிடப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியலில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது. பரமத்தி வேலூர், கபிலர் மலை போன்ற பல பகுதிகளில் வாக்குச்சாவடிகளை வரையறை செய்ய வேண்டும். உதாரணமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் 5 ஆயிரம் தலித் மக்கள் உள்ள பகுதியில் வாக்குச்சாவடிகள் கிடையாது. அவர்கள் மற்ற வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தால் மோதல் ஏற்படும் சூழல்ஏற்பட்டது. ஆகவே, இதுபோன்ற சம்பவங்கள் நாமக்கல்லில் நடைபெறக் கூடாது என்னும்போது, முறையாக ஆய்வு செய்து வாக்குச்சாவடிகளை வரையறை செய்ய வேண்டும்.மாறாக, இந்த கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளை அழைத்து விதம் ஒன்று, இங்கு நடத்தப்படும் விதம் ஒன்று. 15 நிமிடங்கள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே கலந்து கொண்டார். மேலும், வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இதற்கான பட்டியலை கொடுக்கிறோம். அதனைவாங்கிச் செல்லுங்கள் என கூறுவது முறையான பதில் இல்லை. முழுமையான கருத்துக்களை அரசியல் கட்சியினரிடம் இருந்து கேட்டிருக்க வேண்டும். ஆனால், இக்கூட்டம் கண்துடைப்பாகவே உள்ளது என அவர் தெரிவித்தார்.

;