tamilnadu

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பில் 650 காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

நாமக்கல், மே 19-நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் 650 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். வேட்பாளர்கள், முகவர்கள் செல்லிடப்பேசியை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தார்.நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்தமாதம் ஏப்.18 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 23 ஆம் தேதி திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் பற்றிமாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்குகள் எண்ணப்படும் திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும்பாதுகாப்புக்காக தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையன்று, ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 6 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 15 காவல்ஆய்வாளர்கள், 109 உதவிஆய்வாளர்கள், 519 காவல்துறையினர் என மொத்தம் 650 பேர் பணியில் ஈடுபடுகின்றனர்.முகவர்கள், வேட்பாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக, விவேகானந்தா மருத்துவமனையின் முன்புறமும் மற்றும் உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல யாருக்கும் அனுமதியில்லை. அரசுஊழியர்கள் காலை 6 மணிக்கெல்லாம், விவேகானந்தா கல்லூரியின் நுழைவு வாயில்வழியாகச் செல்ல வேண்டும். அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். செல்போன் வைப்பதற்காகதனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சியினரின் வசதிக்காக தனியாக ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. முகவர்கள் தடைசெய்யப்பட்ட எவ்வித பொருட்களையும் மையத்துக்குள் கொண்டு வரக்கூடாது. உணவு மற்றும் பேப்பர், பேனாக்கள் அங்கேயே வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் 300 காவல்துறையினரும், கல்லூரிவளாகத்தைச் சுற்றிலும் 300காவல்துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பர். காலை 6 மணிக்கு தொடங்கும் பணியானது இரவு 8 மணி வரைநீடிக்க வாய்ப்புள்ளது என்றார்.

;