tamilnadu

img

சுருக்குவலை மீன்பிடித் தொழிலை தடை செய்க... முதல்வருக்கு மீனவர் கூட்டமைப்பு கடிதம்

நாகர்கோவில்:
சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் ஏற்படும் மோதலை முடிவுக்கு கொண்டுவர இருசாரரையும் சமாதானப்படுத்தி சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறுதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜி.செலஸ்டின், பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது: தமிழ்நாட்டில் சுருக்குமடி இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்கும்போது சிறிய வகை மீன்கள் முதல் பெரிய வகைமீன்கள் வரை அனைத்தும் கூட்டமாக மாட்டிக் கொள்ளும். இதனால் மீன் வளம் குன்றி காலப்போக்கில் மீன் இனமே இல்லாத நிலை ஏற்படும்.இதனை நன்கு அறிந்த பாரம்பரிய மீனவர் களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு கடந்த2007 ஆம் ஆண்டு சுருக்கு மடி வலைக்கு தடைவிதித்தது. தடையை உறுதி செய்யும் விதத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் சுருக்குமடி வலைக்கு தடையை உறுதிபடுத்தியது. அந்த ஆணையின்படி தடையை மீறிசுருக்குவலை பயன்படுத்தினால் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன்கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முடியும். 

ஆனால் தற்போது மீன் தொழிலில் ஈடுபடாதபெரும் முதலாளிகள் பலர் விலையுயர்ந்த நவீன படகுகளை வாங்கி மீன் தொழிலாளர்களைக் கொண்டு சுருக்குமடி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுருக்குமடி பயன்படுத்துவோருக்கு பெருத்த லாபமும், இதர மீன்தொழிலாளர்கள் மீன் இன்றி சொற்ப லாபத்துடனும் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அரசு அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் சுருக்குமடி வலை பயன்பாடு பல ஆண்டுகளாக மறைமுகமாக தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. 

இந்த சூழலில் சுருக்கு மடி வலை மீனவர்களும், மற்ற மீனவர்களும் மோதிக் கொள்கின்ற நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் சுருக்குவலை மீன்பிடித் தொழிலை தடை செய்து, மாவட்ட அதிகாரிகள் சட்டத்தை கடுமையாக்கியதால், அந்தப் பகுதியில் போராட்டங்கள்நடைபெற்று வருகின்றன. இதனால் மீன்பிடி தொழிலை நம்பி வாழக்கூடிய குடும்பங்கள் பொருளாதாரத்தை இழந்து மிகவும் வேதனைக்குள்ளாவதையும், வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடியாத சூழ்நிலையில் சொல்லொண்ணா கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட நிலைமையில் சுருக்குவலை மீன்பிடி தொழிலாளர்களும், எதிர்ப்பு தெரிவிக்கும் இதர மீனவர்களும் மோதுகின்ற அசாதாரண சூழல்  நிலவுகிறது. இதனை தவிர்க்கவும்,இரண்டு தரப்பு மீனவர்களின் வாழ்வாதா ரங்களை காக்கவும் இரு சாராரையும் அழைத்து நிலைமைகளை விளக்கி சமாதான கூட்டங்கள் நடத்தி சட்ட ஒழுங்கை பாதுகாத்து ஒட்டுமொத்த மீனவர்களின் நலன்காக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

;