tamilnadu

img

உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....

மயிலாடுதுறை:
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரியஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 18 ஆம் தேதிமுதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிடலாம் என தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.  

கி.பி. 1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரர்கள் (டென்மார்க் நாட்டினர்) 1620-ல் கடற்கரைக்கு மேற்கே டேனிஷ் கலை நுணுக்கத்துடன் கோட்டையை கட்டி தங்களது அதிகார மையமாக பயன்படுத்தினர். 401 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ்வைப்பகத்தில் 14,15,16 ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், 1200 ஆம் ஆண்டு கால சிலைகள், பீங்கான், மண், மரத்தாலான பல நூறு ஆண்டுகள் பழமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போர்க் கருவிகள், 16 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல்ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்று சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளனர்.மேலும் கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டகவைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.வரலாற்று சின்னங்கள் நிறைந்த இக்கோட்டையை ஏப்ரல் 18 ஆம் தேதிமுதல்  ஒரு வாரக் காலத்திற்கு எந்தவிதகட்டணமுமின்றி பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் பார்வையிட லாம் என தமிழக அரசு தொல்லி யல்துறை அறிவித்துள்ளது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை களில் தரங்கம்பாடியில் அதிகளவு கூடும்சுற்றுலா விரும்பிகள் ஏப்.18 அன்று கொரோனா நோய்த்தொற்று காரணமாக உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து குறைவான சுற்றுலா பயணிகளே தரங்கம்பாடியில் கூடினர். அதிலும் கட்டணமில்லாமலும் குறைந்த அளவே கோட்டையையும், கோட்டையின் உள்ளே செயல்படும்அகழ்வைப்பகத்தை பார்வையிட்டு சென்றனர். டேனிஷ்கோட்டை நிர்வாகம் தரங்கம்பாடி எல்லை பகுதியில் மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழாவையொட்டி கட்டணமின்றி பார்வையிடலாம் என்ற அறிவிப்பு குறித்த அறிவிப்பு பலகையை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். 

மேலும் கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிருமிநாசினி, தெர்மாமீட்டர் பரிசோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.