இத்தாலியின், பிளாரென்ஸ் நகரில் செல்வம் பொருந்திய பிரிட்டிஷ் உயர்குடிக் குடும்பமொன்றில் பிறந்தவர் பிளாரென்ஸ் நைட்டிங்கேல்.
- எம்ப்லீ பார்க், பிளாரென்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடம், இப்பொழுது ஒரு பாடசாலையாக உள்ளது.
கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாக தாதியர் (செவிலியர்) சேவையை அவர் உணர்ந்தார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், குறிப்பாகத் தாயாரின் எதிர்ப்புக்கும், துன்பத்துக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை பிளாரென்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். தொடர்ந்து தாதியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது. அக் காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். தாதியர் சமையலாட்களாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.
பிளாரென்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர்கள் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பிளாரென்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.
ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜிய மற்றும் ஒட்டோமான் பேரரசுப் படைக் கூட்டணிக்குமிடையே 1854 – 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.
கிரீமியப் போரில் காயமடைந்த வீரர்களுடைய நிலைமை மோசமாக இருப்பது குறித்த அறிக்கைகள் போர் முனையில் இருந்து பிரிட்டனுக்கு கசிந்தபோது பிளாரென்ஸ் அது குறித்துத் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். பிளாரென்ஸ் நைட்டிங்கேலும் அவரது சிற்றன்னை உட்பட அவரால் பயிற்றுவிக்கப்பட்ட 38 தாதியரும் துருக்கியில் இருந்த ஐக்கிய இராஜ்ஜியத்தின் முதன்மை முகாமிற்கு நவம்பர் 1854ம் ஆண்டு சென்றடைந்தனர். நவம்பர் தொடக்கத்தில் நைட்டிங்கேல் ஸ்கட்டாரி யில் இருந்த செலிமியே முகாமுக்குச் சென்றார். அங்கே நிர்வாக அலட்சியத்தினால், போரில் காயமுற்ற வீரர்கள், அதிக பணியால் களைத்திருந்த மருத்துவப் பணியாளரால் சரிவரக் கவனிக்கப் படாமை யைக் கண்டார்கள். மருந்துத் தட்டுப்பாடும் சுகாதாரக்குறை வும் உயிராபத்து விளைவும் தொற்றுக்களும் அம்முகாமில் காணப்பட்டன. நோயாளருக்கான உணவைத் தயாரிப்பதற்கான வசதிகளும் இருக்கவில்லை. சூழல் தூய்மையாக இல்லாததாலேயே நோய்கள் பரவுகின்றன என்னும் கொள்கையுடையவர் பிளாரென்ஸ். அதன் சார்பில் தீவிரமாக வாதாடியும் வந்தார்.
இதனால், பிளாரென்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் குழுவும் முகாமின் மருத்துவமனையையும், கருவிகளையும் முழுமையாகச் சுத்தப்படுத்தியதுடன், நோயாளர் கவனிப்பையும் ஒழுங்குபடுத்தினர். எனினும் இவர் காலத்தில் ஸ்கட்டாரியில், இறப்பு வீதம் குறியவில்லை. மாறாக, அதிகரித்துவந்தது. அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது அங்கேயே கூடுதலான இறப்புக்கள் நிகழ்ந்தன. அவருடைய முதல் மாரிக்காலத்தின்போது 4,077 வீரர்கள் அங்கே இறந்தனர். போர்க் காயங்களினால் இறந்ததிலும் 10 மடங்கு கூடுதலானோர், டைபாய்ட், வாந்திபேதி, வயிற்றோட்டம் ஆகிய நோய்களுக்குப் பலியாயினர். அளவுக்கதிகமான இட நெருக்கடி, குறைபாடுள்ள கழிவு வாய்க்கால்கள், காற்றோட்டம் இன்மை ஆகியவை, முகாமின் தற்காலிக மருத்துவமனை நோயாளருக்கு உயிராபத்தை விளைவித்தது. இந்நிலை காரணமாக, 1855 ஆம் ஆண்டில் ஒரு சுகாதாரக் குழு பிரிட்டிஷ் அரசினால் ஸ்கட்டாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது பிளாரென்ஸ் அவரது தாதியரும் வந்து 6 மாதத்துக்குப் பின்னராகும். இவர்கள் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி, காற்றோட்டத்தையும் மேம்படுத்தினர். இதனால் இறப்புவீதம் பெருமளவு குறைந்தது.
மருந்துத் தட்டுப்பாடும் குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார். படைவீரரின் உடல்நிலை குறித்து அரசாணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமெனக் கருத ஆரம்பித்தார். இந்தப் போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது.
பிரிட்டனில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும் சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட “தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள்’, “உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள்” “பிரிட்டிஷ் இராணுவத்தின் மருத்துவ மனை நிர்வாகமும், செயல் திறனும்” என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.
இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.
தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1910, ஆகஸ்ட் 13 ஆம் நாள் தனது 90 ஆம் வயதில் மிகவும் அமைதியாக தனது அறையில் மரணமெய்தினார்.
இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட பிளாரென்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார். மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புகழ் பெற்றிருந்தாலும், இங்கிலாந்தின் பெண்ணிய பங்களிப்பிலும் முக்கிய மான ஒருவராவார். பிளாரென்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று ‘உலகச் செவிலியர் தினம்’ கொண்டாடப்படுகிறது. கொரோனா காலத்தில் செவிலியர்களே கடவுளாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குரிய நியாயமான ஊதியமோ பாதுகாப்புக் கருவிகளோ வழங்கப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை. இனியேனும் மத்திய மாநில அரசுகள் செவிலியர்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்தி அவர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பது தலையாய கடமை.