tamilnadu

img

தொழில் உறவுகள் தொகுப்புச் சட்டம் 2020...

தொழில் உறவுகள் தொகுப்புச் சட்டம் மூன்றுமுறை மாற்றங்களை கண்டுள்ளது .முதலில் 2015 வாக்கில் ஒரு நகல் வெளியிடப்பட்டது. அது மிகவும் பிற்போக்குத்தனமாக இருந்தது. அதன்மேல் 2019 இல் தொழில் உறவுகள் தொகுப்பு மசோதா 2019 நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் நிர்ப்பந்தித்ததன் விளைவாக மத்திய அரசு இந்த தொகுப்பு மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி வைத்தது. நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலித்தது .அதில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிஐடியுவின் கேரள மாநில பொதுச்செயலாளரும் ஆன எளமரம் கரீம் பங்கு வகித்து மாற்றுக் கருத்தை முன்வைத்தார். இந்தநாடாளுமன்ற நிலைக்குழு சிஐடியு மற்றும் இதர தொழிற்சங்கங்களின் பல்வேறு கருத்துக்களை ஏற்றுக்கொண்டது. பல கருத்துக்கள் சிஐடியுவுக்கு ஏற்புடையதல்ல என்றும் மாற்றுக் கருத்தை  எளமரம் கரீம் முன்வைத்தார். நாடாளுமன்ற நிலைக்குழுவின் சில பரிந்துரைகளை தொழில் உறவுகள் தொகுப்புச் சட்டம் 2020 ஏற்று மசோதாவில் திருத்தம் செய்துள்ளது. சில பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. சங்கங்களின் சில கருத்துக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால் வேறு சில கருத்துக்கள் ஏற்கப்படவில்லை.

பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது என்ன?
இந்த சமயத்தில் பொருளாதார ஆய்வறிக்கை இந்த ஆண்டு கூறுவதை நாம் கவனிக்கலாம். “கூட்டுக் களவாணிகளுக்கு ஆதரவா’ அல்லது தொழில் முதலாளிகளுக்கு ஆதரவா என்ற தலைப்பில் அந்த அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம் விவரிக்கிறது. அதன் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது மிகவும் கவனத்துக்கு உரியது. 1991 க்கு அல்லது தாராளமயத்துக்கு முன்பு  60 ஆண்டுகள்ஆன கம்பெனிகள் சென்செக்ஸ் பட்டியலில் பெயர்இருக்கும். தாராளமயத்துக்கு பின்பு அது 12 ஆண்டுகளாக குறைந்துவிட்டது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் மூன்றில் ஒரு பாகம் சென்செக்ஸ் கம்பெனிகள் காணாமல் போகின்றன. புதிய கம்பெனிகள், புதிய உற்பத்திப் பொருட்கள், புதிய தொழில்நுட்பங்கள், பொருளாதாரத்தில் நுழைகின்றன. இதனை பொருளாதார அறிக்கை ‘ஆக்கப்பூர்வமான அழிவு’ (creative destruction) என்கிறது. எனவே பல தொழில்கள் மூடப்படும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதும் அன்றாட நடைமுறை ஆகிவிட்டது. எனவே இதை சுலபமாக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்கள் அமைய வேண்டும் என்பதுதான் முதலாளிகளின் கருத்தாகும். முதலாளிகளின் அரசான மோடிஅரசின் கருத்துமாகும். எனவேதான் அதற்கேற்றார்போல் சட்டங்களை சுலபம் ஆக்குகிறார்கள். கொள்ளைநோய் காலத்தில் மட்டும் ஒரு கோடியே 89 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளார்கள். அவர்களை வேலையிலிருந்து நீக்குவதும் ஆலைகளை மூட முதலாளிகளுக்கு சுதந்திரமும் அளிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டியது முதலாளிகளின் விருப்பம் அல்லவா? அதை நிறைவேற்றும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தங்கள் அமைந்துள்ளன. 

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் 90களில்ஆரம்பித்ததிலிருந்தே பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளின் கோரிக்கை இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களை நெகிழ்வுத் தன்மை உடையதாக மாற்ற வேண்டும் என்பதாகும். அவர்களது கருத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் மிகவும் வறட்டுத்தனமாக இருப்பதாக அவர்கள் கூறி வருகிறார்கள். அதற்கேற்ப சட்டங்களை திருத்தி அமைக்க வேண்டும் என்பதே பல அரசுகளின் விருப்பமாக இருந்து வருகிறது .குறிப்பாக முதலாளிகளுக்கு வேலையில் வைக்கவும் நீக்கவும் அதிகாரமளிக்க சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் கோரிக்கை. தொழிலாளர்களும் இந்த சட்டங்களில் உள்ள தொழிலாளர் விரோத அம்சங்களை திருத்தி அமைக்கவேண்டும் என்று கோரி வருகிறார்கள். ஆனால் இப்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் தொழிலாளர் விரோத திருத்தங்கள் ஆகும். ஒரு பானை சோற்றுக்குஒரு சோறு பதம் என்பது போல ஒரு சில விஷயங்களை நாம் பார்த்தால் உண்மை புரியும்.

வேலை நிறுத்த உரிமை வேண்டும்
தொழிலாளர்களைப் பொறுத்தவரை வேலை நிறுத்தம் என்பது அவர்களது இறுதி ஆயுதம். பல சமயங்களில் முதலாளிகள் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கு வர வைப்பதற்கு வேலைநிறுத்தம் தேவைப்படுகிறது. நமது நாட்டில் பல கோரிக்கைகள் நேரடிப் பேச்சு வார்த்தையில் கூட்டு பேரத்தின் மூலம் தீர்க்கப்படுவதில்லை. நமது நாட்டில் இரு முறைகள் உள்ளன. ஒன்று இடதுசாரிகள் முறை. இன்னொன்று காந்திய முறை. காந்தி அகமதாபாத் தொழிலாளர்கள் பிரச்சனையில் நடுவர் தீர்ப்புக்கு விட கோரிக்கை வைத்து வேலை நிறுத்தம் செய்ததால் நடுவர் தீர்ப்புக்கு விடவே முதலாளிகள் தயாராக இல்லை. வேலை நிறுத்தம் செய்வதற்கு காந்தி அறைகூவல் விடுத்தார். வேலை நிறுத்தத்திற்கு பின் முதலாளிகள் நடுவர் தீர்ப்புக்கு விட ஒத்துக்கொண்டனர். இடதுசாரிகள் பேச்சுவார்த்தை ஒத்துவரவில்லை என்றால் வேலைநிறுத்தம், நேரடிப் பேச்சுவார்த்தை, கூட்டு பேரஉரிமை ஆகியவற்றை வலியுறுத்துகின்றனர். 1947 இல்உருவான தொழில் தகராறு சட்டம் நடுவர் தீர்ப்பு முறையையே முன்வைக்கிறது. கோரிக்கை வைக்கவேண்டும்; பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் நடுவர் தீர்ப்புக்கு விடவேண்டும்.

நடுவர் தீர்ப்புக்கு பேச்சுவார்த்தை நடைமுறையில் இருக்கும்போது வேலை நிறுத்தம் செய்யக் கூடாது. அங்கே பிரச்சனை தீரவில்லை என்றால்  தொழில் கோர்ட்டுக்கு பிரச்சனை அனுப்பப்படும். அப்போதும் வேலைநிறுத்தம் சட்டவிரோதம். தொழில் கோர்ட்டின் தீர்ப்பு இரு தரப்பையும் கட்டுப்படுத்தும். தொழிலாளர் விரோதமாக அந்தத் தீர்ப்பு இருந்தால் அப்போதும் வேலைநிறுத்தம் சட்ட விரோதமாகும். குறிப்பாக பொது பயன்பாட்டுதுறை தொழில்களில் ஆறு வாரம் முன்பு வேலை நிறுத்தம் செய்யக் கூடாது. 14 நாள் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்து முடிந்த பிறகுதான் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும். அப்போதும் பேச்சுவார்த்தை துவங்கிவிட்டால் வேலைநிறுத்தம் சட்டவிரோதம்.

நமது அரசியல் நிர்ணய சட்டத்தில் பல்வேறு உரிமைகள் இருந்தபோதும் வேலைநிறுத்தம் செய்வது அடிப்படைஉரிமையாக இல்லை. எனவே நீதிமன்றங்கள் எல்லாவேலை நிறுத்தமும் சட்டவிரோதம் என்று அறிவிக்கின்றன. தொழில் தகராறு சட்டம் 1947ன் படி எந்த வேலை நிறுத்தமும் சட்டவிரோதம்தான். பொது பயன்பாடு அல்லாததுறைகளில் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுக்காமலேயே வேலைநிறுத்தம் செய்வது சாத்தியம். ஆனால் பொது பயன்பாட்டு தொழில்களில் வேலை நிறுத்தத்திற்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும். 14 நாட்கள் கழித்துதான் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் .2020 தொழில் உறவுகள் தொகுப்பு சட்டம் பொது பயன்பாடு அல்லாத தொழில்களிலும் வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றும் 14 நாள் கழித்துதான் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு தண்ணீர், மின்சாரம், இயற்கைஎரிவாயு, தொலைபேசி போன்ற அத்தியாவசிய சர்வீசுக்குமட்டுமே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். எல்லா தொழில்களுக்கும் விரிவுபடுத்தக் கூடாது. என்று பரிந்துரை அளித்தது. அதைக்கூட மத்திய அரசு ஏற்கவில்லை. இப்போது இந்த சட்டத்தின்படி அனைத்து தொழில்களிலும் வேலைநிறுத்த அறிவிப்பு 60 நாட்களுக்கு முன்பு தரவேண்டும். வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்த 14 நாள் கழித்துதான் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றி உள்ளது .நமது கோரிக்கை எந்தத் தொழிலானாலும் தொழிலாளிக்கு வேலை நிறுத்தம் செய்யும் உரிமை அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்.

இன்னொரு அம்சம் ஆலைகளை மூடுவதற்கு முதலாளிகளுக்கு உள்ள உரிமை பற்றியதாகும். 100 தொழிலாளிகளும் அதற்கு மேலும் பணி செய்யும் தொழிற்சாலைகள் மூட வேண்டும் என்றால் அரசின் அனுமதி பெறவேண்டும் என்று இருந்தது .தொழில் உறவுகள் தொகுப்பு சட்டம் 2020 இதனை 300 தொழிலாளிகளும் அதற்கு மேலும் பணி செய்தால் அந்த ஆலைகளை மூடுவதற்கு அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்று மாற்றி உள்ளது. இதன் பொருள் என்னவென்றால் 90 சதவீதம் தொழிற்சாலைகள் 44 சதவீதம் தொழிலாளர்கள் 300 க்குட்பட்ட வரம்புக்குள் வந்துவிடுகிறார்கள். எனவே அவர்களுக்கு மூட வேண்டும் என்றால் முதலாளிகள் அரசின் அனுமதி பெற தேவையில்லை.பாஜக ஆளும் பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் சட்டங்களில் இவ்வாறுதிருத்தம் செய்துவிட்டன .அதை அங்கீகரிக்கும் வகையில் தான் பாஜக மோடி அரசு இந்த திருத்தத்தை சட்டத்தில் கொண்டு வந்துள்ளது. முதலாளிகளுக்கோ இந்த வரம்பும் கசக்கிறது. எந்த வரம்பும் கூடாது என்பதுதான் அவர்களது விருப்பம்.

நிலையாணை
இன்னொரு அம்சம் தொழில் நிலையாணை சட்டம் தொடர்பானது. தொழிலாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்களுக்கு இந்த நிலையாணை ஓரளவு ஜனநாயகப்பூர்வ தீர்வளிக்கிறது. இதிலும் நமக்கு பல அம்சங்கள் தொழிலாளர்களுக்கு சாதகமாக திருத்தி அமைக்கப்பட வேண்டியுள்ளது. உதாரணமாக விசாரணையில் பதிவான அம்சங்களை வைத்துதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது நிலையாணையில் குறிப்பாக கூறப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தான் வழிகாட்டியாக உள்ளன. எனவே பல தீர்ப்புகள் வந்த அம்சங்களை உள்ளடக்கி நிலையாணை குறிப்பாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது நமது கோரிக்கை. ஆனால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொழிலுறவு தொகுப்பு மசோதா 2019 100தொழிலாளர்களும் அதற்கு மேலும் உள்ள தொழில்களுக்கு தான் நிலையாணை பொருந்தும் என்று இருந்தது. நமது கோரிக்கை அனைத்து துறைகளுக்கும் நிலையாணை பொருந்த வேண்டும்.குதிரை கீழே தள்ளி குழியும் பறித்த கதையாக 2020 தொகுப்புச் சட்டத்தில் இந்த வரம்பை 300ம் அதற்கு மேலும்உள்ள தொழிலாளர்களுக்கு தான் இந்த நிலையாணை பொருந்தும் என்று மாற்றியமைத்து விட்டது .இதனால் 90 சதவீதம் தொழில்கள், 44 சதவீதம் தொழிலாளர்கள் நிலையாணையிலிருந்து நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு முதலாளிகள் வைத்ததுதான் சட்டம்.

தொழிலாளி யார்?
இந்தக் கேள்விக்கு பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. பல முதலாளிகள், ஏன் அரசுத்துறை அதிகாரிகள் கூட (சென்னை மெட்ரோ உட்பட) எல்லோரும் சூப்பர்வைசர் தான்; யாரும் தொழிலாளி இல்லை; ஒரு டெக்னீசியன் கூட சூப்பர்வைசர் தான் என்று அடம்பிடிக்கிறது. அதனால் தொழில் தகராறு சட்டம் அல்லது நிலையாணை சட்டமோ அவர்களுக்கு பொருந்தாது என்று வாதிடுகின்றனர். இதற்காக பல நீதிமன்ற வழக்குகள் கொடுக்கப்படுகின்றன. தீர்ப்புகள் தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் சட்டத்தில் சரியான வரையறை இல்லாத காரணத்தால் மீண்டும் மீண்டும் இந்த பிரச்சனை எழுந்து கொண்டே உள்ளது.எனவே சிஐடியு சார்பில் ஒரு திருத்தம் வழங்கப்பட்டது. அதில் சூப்பர்வைசர் என்பவர் அவரின் கீழ்  பணியாற்றும் தொழிலாளிக்கு ஏதேனும் நன்மைகளை அளிப்பவராக இருக்க வேண்டும்; ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பவராக இருக்க வேண்டும் என்ற திருத்தத்தை அளித்தது. இதனை நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்றுபரிந்துரை செய்தது. ஆனால் தொழில் உறவுகள் தொகுப்புச் சட்டம் 2020 இதற்கு விடை காணவில்லை. இந்த திருத்தத்தை ஏற்று சட்டமாக்கவில்லை. சூப்பர்வைசர் என்பவர் 15000 சம்பளம் வாங்குபவர் என்று தொகுப்பு மசோதா 2019 இல்இருந்தது. நாடாளுமன்ற  நிலைக்குழு இதை விமர்சித்தது.மத்திய அரசில் குறைந்தபட்ச ஊதியமே பதினெட்டாயிரம் என்று இருக்கும்போது சூப்பர்வைசருக்கு பதினைந்தாயிரம் என்பது ஏற்க முடியாது என்று கூறியிருந்தது. சிஐடியு அதை 50,000 ஆக்க வேண்டும் என்று திருத்தம் அளித்தது. ஆனால் மத்திய அரசு 18 ஆயிரத்தை ஏற்று சட்டத்தில் கொண்டு வந்துள்ளது. ஆனால் சூப்பர்வைசர் மற்றும் தொழிலாளிக்கு உள்ள வித்தியாசம் போக்கப்படவில்லை. இது குழப்பமாக இருப்பதுதான் முதலாளிகளுக்கு சாதகமானது. எனவே இது தொடர்கிறது.

அதுமட்டுமல்ல, அங்கன்வாடி, ஆஷா போன்ற திட்டதொழிலாளர்களை தொழிலாளர்களாக கருதி அவர்களுக்கு தொழில் தகராறு சட்டம், நிலையாணை ஆகியவைபொருந்த வேண்டும் என்பது சிஐடியுவின் கோரிக்கை. இதனை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதை ஏற்கவில்லை. தொகுப்பு சட்டம் 2020 எந்த மாற்றமும் இல்லாமல்அப்படியே உள்ளது .அதேபோல தொண்டு நிறுவனங்கள், மத நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை தொழில் நிறுவனங்களாக கருதி அனைத்து சட்டங்களும் அதன் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் பொருந்த வேண்டும் என்ற கோரிக்கையும் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையும் ஏற்கப்படவில்லை.

தொழிற்சங்க அங்கீகாரம்
முதல்முறையாக தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.நாடாளுமன்ற நிலைக் குழு அங்கீகாரம் வழங்கும் முறையை ரகசிய வாக்கெடுப்பின் மூலம் செய்ய வேண்டும்என்று சிஐடியு முன்வைத்த கோரிக்கையை ஏற்று பரிந்துரைசெய்துள்ளது. உறுப்பினர் பரிசீலனை மூலம் அதைச் செய்ய வேண்டும். இது விதிகள் உருவாக்கும்போது தீர்மானிக்கப்படும் என்று சட்டத்தில் உள்ளது .ரகசிய வாக்கெடுப்பு என்பது நேரடியாக சட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

ஒரு தொழிலில் ஒரே சங்கம் பதிவு பெற்ற சங்கமாக இருந்தால் அந்த சங்கம் தனி பேச்சுவார்த்தைக் குரிய சங்கமாக அங்கீகரிக்கப்படும்.ஒரு தொழிலில் ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்கள் பதிவு செய்யப்பட்ட சங்கமாக இருந்தால் அங்கு 51 சதமானம் உறுப்பினர் உள்ள சங்கம் ஒரே தனி அங்கீகார சங்கமாக அங்கீகரிக்கப்படும். இது 2019 மசோதாவில் 75 சதவீதமாக இருந்தது. நிலைக்குழுவின் விமர்சனத்தை ஏற்று இது 51 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.எந்த சங்கமும் 51 சதமானம் வைத்ததில்லை என்றால் பேச்சுவார்த்தை சங்கம் கிடையாது; பேச்சுவார்த்தை கவுன்சில் நியமிக்கப்படும். எந்த சங்கத்திற்கு 20 சதவீதம் உறுப்பினர் உள்ளதோ அந்த சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி அளிக்கப்படும். கோட்பாட்டு ரீதியில் ஐந்து பிரதிநிதிகள் வருவார்கள். அவர்கள் பேச்சுவார்த்தை கவுன்சிலின் உறுப்பினர்களாக அங்கீகாரம் பெற்று இருப்பார்கள். 2019மசோதாவில் இது பத்து சதமாக இருந்தது. அங்கீகார சங்கங்களுக்கு உள்ள உரிமைகள் யாவை என்பது உருவாக்கப்படும் விதிகளில் சேர்க்கப்படும். எனவே இந்த விதிகளில் ரகசிய வாக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காக சிஐடியு வற்புறுத்துகிறது.ஒரு சங்கத்தை நாற்பத்தைந்து நாளுக்குள் பதிவு செய்வதை முடிக்க வேண்டும் என்பதையும் தொகுப்புச் சட்டம் ஏற்கவில்லை.ஒட்டுமொத்தத்தில் தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு சட்டமே இது. இதற்கெதிராக தொழிலாளர்கள் அனைத்து சங்கங்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

கட்டுரையாளர் : ஆர்.இளங்கோவன், துணைத்தலைவர், டிஆர்இயு.