tamilnadu

img

வனம் மற்றும் சுற்றியுள்ள நிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடாது... தேனி கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேச்சு....

தேனி:
வனஉரிமைச் சட்டத்திற்கு எதிராக, வனநிலங்களிலிருந்தும் வனங்களைச்சுற்றியுள்ள விவசாய நிலங்களி லிருந்தும், பழங்குடி மக்களையும் பல்லாண்டு காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளையும் வெளியேற்றக்கூடாது என மத்திய - மாநிலஅரசுகளை பிரகாஷ் காரத் வலி யுறுத்தினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி அளிப்பு மற்றும் தேர்தல் பிரச்சார துவக்க மாநாடு தேனியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பங்கேற்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் உரையாற்றினார்.

நரேந்திர மோடி அரசு மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த அவர், மோடி அரசுக்கு அடிமைச்சேவகம் செய்கிற அரசாக தமிழகத்தில் எடப்பாடி அரசு இருக்கிறது என்றும் சாடினார். இத்தகைய அதிமுக அரசை சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணியின் வெற்றிக்கு பாடுபடுமாறு கட்சி அணிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அவர் தனது உரையின்போது, வன உரிமைச் சட்டம் தொடர்பாக முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டார். 

அவர் பேசியதாவது:
வன உரிமைச் சட்டம் என்பது 2004ஆம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றிய சட்டமாகும். நாடு முழுவதும்உள்ள வன மக்களையும் வன நிலங்களை நம்பி வாழும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்காக வன உரிமை சட்டத்தை கொண்டுவர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் இடைவிடாமல் அளித்த நிர்ப்பந்தம் மற்றும் போராட்டங்கள் விளைவாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அந்த சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் பல மாநிலங்களில் வனஉரிமைச் சட்டம் முறையாக அமலாக்கப்படாத அவலம் நீடிக்கிறது. தமிழகத்திலும் இந்த சட்டத்தை ஆட்சியாளர்கள் முறையாக அமலாக்காதது மட்டுமல்ல, தவறாகவும் அமலாக்குகின்றனர்.சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் வன நிலங்களை, அதில் உள்ள சுரங்கங் களை, அதில் உள்ள கனிமவளங்களை என ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக, வனங்களில் வாழும் பழங்குடி மக்களை ஆட்சியாளர்கள் வெளியேற்றி வருகிறார்கள். அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியும், விவசாயிகள் இயக்கமும் தொடர் போராட்டங்களை நடத்தி வரு கின்றன.

வன உரிமைச் சட்டத்தின்படி நீண்டகாலமாக வன நிலங்களில் வசிக்கும் பழங்குடியினர், வன நிலங்களில் பல்லாண்டு காலமாக விவசாயம் செய்யும் பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாத மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது விதியாகும்.  ஆனால் பல மாநிலங்களில் இது அமலாகவில்லை. மாறாக, புலிகள் சரணாலயம், யானை சரணாலயம் என்ற பெயரில் வன நிலங்களில் எல்லைகளில் மாற்றிவரையறை செய்து, அங்கிருந்து பழங்குடி மக்களையும் விவசாயிகளையும் வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். தமிழகத்தில் இத்தகைய முயற்சிகளுக்கு அதிமுக அரசு துணைபோகிறது. இதைஅனுமதிக்க முடியாது. வன நிலங்களிலும் வனங்களைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களையும் நீண்டகாலமாக விவசாயம் செய்துவரும் பழங்குடிகள் மற்றும்பழங்குடி அல்லாத அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும். அவர்களது வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். வன உரிமைச்சட்டம் இதைத்தான் சொல்கிறது. அந்த விதிகள் அமலாக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.

;