tamilnadu

img

பி.எப்.ஓய்வூதியர்களுக்கு முன்கூட்டியே மூன்று மாத ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

தில்லி 
பி.எப். ஓய்வூதியர்களுக்கு மூன்று மாத பென்சன் வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இளமறம் கரீம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் அனைத்துப் பகுதி மக்களையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக ஏழைத் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத்தில் பி.எப். ஓய்வூதியர்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. இவர்கள் தங்களது வாழ்நாளில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளனர்.  அவர்களது பல்வேறு பிரச்சனைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. நாடு முழுவதும் சமூக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களது வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவர்களுக்கு மூன்று மாத ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இபிஎஸ்-95 ஓய்வூதியர் சங்கத்தின் மதுரை மாவட்டப் பொதுச் செயலாளர் இராஜரத்தினம் கூறியதாவது:- ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்காக மூன்று குழுக்கள் நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்டும் அதன் பரிந்துரைகள் அமலாக்கப்படவில்லை, 2013-ஆம் ஆண்டு விலைவாசிக்கேற்ப இடைக்கால ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் மற்றும் இன்றைய விலைவாசிக்கேற்ப ரூ. 9ஆயிரம் வழங்கப்படவேண்டுமென செய்யப்பட்ட பரிந்துரையும் நிறைவேற்றப்படவில்லை.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோரிக்கை விடுத்திருந்தார். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்தக் கோரிக்கைகளை பரிசீலிப்பதோடு கொரோனா சமூக ஊரடங்கு காலத்தில் அனைத்து இபிஎஸ்-95 ஓய்வூதியர்களுக்கு முன்கூட்டியே மூன்று மாத ஓய்வூதியத்தை வழங்கவேண்டுமென கூறியுள்ளார்.
 

;