tamilnadu

img

கொரோனா தொற்று மாதிரிகளை சேகரிப்பது மிகவும் ஆபத்தானது; சவால் நிறைந்தது மனம் திறக்கிறார்..... மருத்துவர் புஷ்கர் தாஹிவால்

ஔரங்காபாத்: 
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடமிருந்து  மாதிரிகளை சேகரிப்பது மிகவும் ஆபத்தானது, சவால் நிறைந்து எனக் கூறுகிறார் ஔரங்காபாத் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் புஷ்கர் தாஹிவால்.

அவர் கூறியதாவது:-
ஒரு நபரின் சளி, உமிழ்நீர் மாதிரியை சேகரிப்பதற்கு 30 முதல் 40 வினாடிகளுக்கு மேல் ஆகாது. ஆனால் இது "அதிக ஆபத்து நிறைந்த பணி"  மட்டுமல்ல சவாலானது. நாளொன்றுக்கு 100 பேரின் சளி மாதிரிகளை சேகரிக்க வேண்டும்.

நாங்கள் மூன்று நாட்கள் இந்தப் பணியைச் செய்கிறோம். பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறோம். நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் வேலை. கொரோனா தொற்றுள்ளவர்கள் என சந்தேகப்படுபவர்களை பரிசோதிக்கச் செல்லும் முன் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) அணிந்து கொள்ள வேண்டும். இந்தத் தருணத்தில் தண்ணீர் குடிக்க கூட நேரம் கிடைக்காது.
நோயாளிகளுடனான தொடர்பைத் தவிர்ப்பதற்காகவும், அவர்களின் சளி மாதிரிகளை கொடுக்க வருபவர்களுடனும்  குறுகிய காலத்தில் வேலையை முடிக்க வேண்டும்.
ஒரு நபரின் தொண்டையில் இருந்து உமிழ்நீர் மாதிரியை சேகரிக்க 10 முதல் 12 செ.மீ நீளமுள்ள குச்சியைப் பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில் மூக்கிலிருந்து சளி மாதிரியைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் குச்சி ஒப்பீட்டளவில் நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும். சம்மந்தப்பட்ட நபர் இருமுவதற்கு அல்லது தும்முவதற்கு முன், மாதிரி சேகரிப்பை முடிக்க வேண்டும். பல் மருத்துவராக இருப்பதால், நோயாளியின் வாய் பகுதியைக் கையாளும் நடைமுறை எனக்கு நன்கு தெரியும்.

சேமிக்கப்படும் மாதிரிகள் உடனடியாக சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படும். எடுக்கும் மாதிரிகள் கீழே கொட்டிவிடாமால் இருப்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  அதே எச்சரிக்கையுடன் செவிலியர்கள் உள்ளிட்ட  இதர ஊழியர்களும் பணியாற்ற வேண்டும். மருத்துவர் புஷ்கர் தாஹிவால், 2008-ஆம் ஆண்டு  மும்பை செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களை கவனித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;