tamilnadu

img

நீர் பங்கீட்டை முறைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்:
இந்த ஆண்டு குறுவை சாகுபடி ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. விவசாயிகள் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றநம்பிக்கையில் உழைத்ததால் கூடுதல் பலன்ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பிரச்சனைகள் தொடர்கின்றன. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நீர் பங்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர். 

குறைதீர் கூட்டம்
ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமையேற்றார். பலதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்பின் நிர்வாகிகள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். இடதுசாரி விவசாய இயக்கங்களின் தலைவர்களான எஸ்.தம்புசாமி, பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

எஸ்.தம்புசாமி பேசுகையில், கொரோனா பேரிடர் கால நிவாரண நிதி“பிஎம் கேர்ஸ்” என்ற ட்ரஸ்டிற்கு ஏராளமாக கிடைத்துள்ளது. இந்த நிதியிலிருந்து இந்திய நாட்டு விவசாயிகளுக்கு போதுமான அளவிற்கு நிதி வழங்குவதற்கு தமிழக அரசின் மூலமாக நடவடிக்கை எடுக்கமாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டும்.குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற்றதாக நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சுமார் 15 நாட்கள்தண்ணீர் இல்லாமல் பயிர் காய்ந்ததை பார்க்க முடிகிறது. பல்வேறு காரணங்களால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லாமல் போய்விட்டது. இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டு எந்தந்த பகுதிக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்று முறையாக கணக்கிட்டு பாரபட்சமில்லாமல் தண்ணீர் பிரித்து வழங்கப்பட வேண்டும். மின் இணைப்புகேட்டு நீண்ட காலமாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். செம்மங்குடி சோழசூடாமணி ஆற்றின் குறுக்கே கிடப்பில் போடப்பட் டுள்ள பாலம் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும். செம்மங்குடி – தோட்டக்குடி இடையே சாலை பழுதடைந்துள்ளது. அந்த சாலையை புதிதாக போட வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்து, மாத்திரைகளை கையிருப்புவைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.

பி.எஸ்.மாசிலாமணி பேசுகையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடி விளைச்சல்அதிகமாக இருந்தது குறித்து தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. விவசாயிகளும் இம்மகிழ்ச்சியில் பங்கேற்கிறோம். அதே நேரத்தில் இரண்டுமுறை மேட்டூர் அணை 100 அடி நிரம்பிய போதும் தண்ணீர் இல்லாத காலங்களில் விவசாயிகள் எவ்வாறு சிரமப்பட்டார்களோ அதே போன்றதொரு சிரமத்தை தற்போதும் சந்தித்தனர். அதற்கு முக்கியமான காரணம் நீர் பங்கீட்டில் ஏற் பட்ட குளறுபடிகள் தான்.வரும் காலங்களில் நதிநீர் பங்கீட்டை நிறைவேற்றும் பொறுப்பை வேளாண்மை துறைக்கு மாற்ற வேண்டும். கட்டுமான பணிகளை செய்வதற்கு மட்டுமே பொதுப்பணித் துறையை பயன்படுத்த வேண்டும். நதிநீர் பங்கீட்டில் வேளாண்மைத்துறையை ஈடுபடுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய தேவையின் அடிப்படையில் முறையான விநியோகம் நடக்கும். இதற்குஅரசு நடவடிக்கை எடுத்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும்.மேலும் 2019-2020 ஆம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் தொகை பல விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்தகணக்கெடுப்பில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளது. எனவே பிரச்சனைகளுக்கு உரிய கவனம் செலுத்தி மாவட்ட ஆட்சியர்நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். விவசாய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மற்றும் மன்னார்குடி வருவாய் கோட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கான கூட்டம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கூட்டநெரிசலை தவிர்க்கும் பொருட்டு தனித் தனியே நடைபெற்றது.

;