திருவண்ணாமலை, மார்ச் 24- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் தம்பதியினரின் உறவினர் களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் பிரசாந்த் (25). சென்னையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவரும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த காஞ்சிபுரம் அருகேயுள்ள கல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோமதியும் (19) காதலித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் சோகத்தூர் கிராமத்தில் பிரசாந்த் வீட்டிலேயே வசித்து வந்தனர். பின்னர் அதே கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் திங்களன்று காலை கூலி வேலைக்குச் சென்றார் பிரசாந்த். பிறகு வேலை முடிந்து வீடி வந்த பார்த்தபோது, கோமதி புடவையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசாந்த் கோமதியின் சடலத்தை கீழே வைத்துவிட்டு, அதே இடத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தம்பதியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர்.