tamilnadu

img

பேருந்து வசதியில்லாத ஜவ்வாதுமலை-செங்கம் வழித்தடம்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ளது ஜமுனாமரத்தூர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜமுனாமரத்தூர் தனி தாலுக்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 200 க்கும் மேற்படட குக்கிராமங்கள் கொண்ட இந்த ஜமுனாமரத்தூர் திருவண்ணாமலை மாவட்டத் தின் சுற்றுலா பகுதியாக விளங்கி வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஆண்டு தோறும் இங்கு கோடைவிழா நடத்தப்படுகிறது. இந்த ஜமுனாமரத்தூரில், கோலப்பன் ஏரி படகு சவாரி, பீமன் நீர்வீழ்ச்சி, குழந்தைகள் பூங்கா ஆகிய சுற்றுலா அம்சங்களும், காவனூரில், வைனுபாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வன விலங்கு சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த பகுதி விவசாயிகள், சாமை, திணை, வரகு உள்ளிட்ட விவசாய சாகுபடிகளை செய்து வருவதுடன், தேன், பலா, மிளகு உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.ஜமுனாமரத்தூருக்கு போளூர், கண்ணமங்கலம், திருப்பத்தூர், பரமனந்தல் ஆகிய 4 வழிகளில் சாலை போக்குவரத்து அமைந்துள் ளது. ஆனாலும் செங்கம் பரமனந்தல் சாலை வழியாக பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், மலை கிராம மக்கள் கடுமையாக தவித்து வருகின்றனர். செங்கத்திலிருந்து மேல்பட்டு வரை தனியார் மினி பேருந்து இயக்கப்படுகிறது. ஆனால் செங்கம் – ஜமுனாமரத் தூர் இடையே அரசு பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  செங்கம்-ஜமுனாமரத்தூர் இடையே, மேல்பட்டு, கீழ்பட்டு, புளியூர், சிலம்படி, மேல் சிலம்படி, பலாமரத்தூர், விளாம்மூச்சி, கீழ்விளாம் மூச்சி, கல்யாணமந்தை என 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் மலை கிராம மக்கள் செங்கம் வருவதற்கு குறுக்குவழியில் குப்பனத்தம், பரமனந்தல் ஆகிய ஊர்கள் வரை நடந்துவந்து பேருந்து மூலம், செங்கம் செல்கின்றனர்.மலை கிராம மக்கள் தங்களின் விவசாய சாகுபடி பொருட்களை செங்கம் சந்தைக்கு கொண்டு செல்லவும், மாணவ, மாணவிகள் செங்கம் பகுதியில் உள்ள கல்வி நிலையங்களுக்கு செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவமனை செல்லவும், இந்த சாலையில் பேருந்து இயக்கப்படாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் இருந்து மேல்பட்டு வரையிலும், பரமனந்தலில் இருந்து அத்திப்பட்டு வரையிலுமாக இரண்டு கட்ட சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, ஜமுனாமரத்தூரில் இருந்து செங்கம் வரையிலான சாலையில் அரசு பேருந்து இயக்க ஆணை பிறப்பித்தார். அப்போது இயக்கப்பட்ட அரசுப் பேருந்து சில நடைகளோடு நின்றுவிட்டது. இந்த சாலையில் அரசு பேருந்து இயக்குவதில், மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாததால், இன்று வரை அரசுப் பேருந்து இயக்கப்படவில்லை. எனவே, இப்பகுதி மக்களின் அத்தியாவசிய, அடிப்படை தேவை கருதி, இந்த சாலையில் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என, மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ஜெ.எஸ். கண்ணன்