tamilnadu

திருப்பூர் மாவட்ட செய்திகள்

சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருப்பூரில் மே 15ம் தேதி துவங்குகிறது

திருப்பூர், மே 7-திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி, திருப்பூர்-அவிநாசி ரோடு பழங்கரையில் உள்ள ஐகேஎப் வளாகத்தில் வரும் 15ந் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடக்கிறது. திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்புள்ள பின்னலாடைகள் ஏற்றுமதி செய்தனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டில் ரூ.ஒரு லட்சம் கோடி என்ற இலக்கோடு பல்வேறு நாடுகளிலிருந்து ஆர்டர் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சர்வதேச பின்னலாடை கண்காட்சி அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் திருப்பூர்-அவிநாசி ரோடு பழங்கரையில் உள்ள ஐகேஎப் வளாகத்தில் 46ஆவது சர்வதேச பின்னலாடை கண்காட்சி, வரும் 15ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனத்தினர் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, ஆர்டர்களை பெற முடியும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். கண்காட்சியை, மத்திய கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் துவக்கி வைக்கிறார். இந்திய பின்னலாடை கண்காட்சி சங்க தலைவர் சக்திவேல், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் மாகு உட்பட பலர் பங்கேற்கின்றனர். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி உட்பட பல்வேறு தொழில் நகரங்களை சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொள்கின்றனர்.


பொது சேவை மையங்களில் மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சேவை கண்காணிப்பு

திருப்பூர், மே 7 -பொது சேவை மையங்களின் மூலமாக மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு வகையான சான்றிதழ்கள் விரைவாக வழங்கப்பட்டு வருகிறது, இதை தொடர்புடைய அலுவலர்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 292 பொது சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இச்சேவை மையங்களில் பொது மக்களுக்கு வருவாய்த் துறையின் சார்பில் சாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ்கள் என பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் விண்ணப்பித்தால் விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும் விண்ணப்பதாரருக்கு இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தி பெறப்பட்டவுடன் விண்ணப்பதாரர் இணையதளம் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருகாமையிலுள்ள அரசு பொது சேவை மையம் மூலமாக சான்றிதழை பெற்று கொள்ளலாம்.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு வகையான சான்றிதழ்கள் அரசு பொது சேவை மையம் மூலமாக விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. சான்றுகளை எவ்வித காலதாமதமின்றி வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை நாள்தோறும் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் இப்பொது சேவை மையங்களை பயன்படுத்தி உரிய சான்றிதழ்களைப் பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறியுள்ளார்.


தாராபுரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை அமோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தாராபுரம், மே 7-தாராபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராபுரம் பகுதியில் உள்ள பேக்கரி, மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் குடோன்களில் பெருமளவு பதுக்கி வைத்து, சில்லறை விற்பனை கடைகளுக்கு எவ்வித அச்சமின்றி விற்பனை செய்கின்றனர். முன்னதாக, தாராபுரத்தில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு மொத்த விற்பனையாளர்களிடமிருந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் அதிரடி காரணமாக பதுங்கிய வியாபாரிகள் மீண்டும் விற்பனையை துவக்கி அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர். ஆகவே, இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.