tamilnadu

img

எட்டு வழிச்சாலை தீர்ப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் பல்லடத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

திருப்பூர், ஏப். 8 –

சென்னை சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வரவேற்கத் தக்கது. இந்த தீர்ப்புநாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.பல்லடத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேர்தல் பணிமனையில் திங்களன்று செய்தியாளர்களுக்கு ஜி.ராமகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:5 ஆண்டு பாஜக ஆட்சியில் பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி வரிச்சட்டம் சிறு,குறு தொழில்கள் உள்பட பல துறைகளையும் கடுமையாக பாதித்துள்ளன. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர்,கோவை உள்ளிட்ட பகுதிகள் விசைத்தறி, இன்ஜினியரிங் சிறு,குறு தொழில்கள் அதிகமுள்ள மாவட்டங்களாகும். இந்த தொழில்கள் கடும்பாதிப்பு அடைந்துள்ளன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சிறு, குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதம் இருப்பதை 5 சதவிகிதமாக குறைப்பதாகவும், ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு வரிவிதிப்பு நீக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.நாடு முழுவதும் 26 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் தறிகள் உள்ளன. மத்தியஅரசின் கொள்கைகள் காரணமாககணிசமான விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன. மற்ற நிறுவனங்கள் கடும் சிரமப்படுகின்றன. பலர் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. 2014 ஆம் ஆண்டு விசைத்தறி போராட்டத்துக்குப் பிறகு மீட்டருக்கு ரூ1.25 என கூலி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதில் 40 பைசா தொழிலாளர்களுக்குத் தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை அமலாக்கி இருந்தால் விசைத்தறி தொழில் நெருக்கடியைச் சமாளித்து இருக்கலாம். ஆனால் அந்த ஒப்பந்தம் அமலாகவில்லை. அத்துடன் பணமதிப்பு நீக்கம் காரணமாக கூலி கொடுக்க முடியாத நிலையில் விசைத்தறிகள் வங்கிக் கடன் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும். விசைத்தறிக்குத் தனி ரகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளியை சந்தைப்படுத்த தனி ஏற்பாடு வேண்டும். அப்போதுதான் சிறு, குறு தொழில்களை பாதுகாக்க முடியும்.இந்த பின்னணியில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜிஎஸ்டி சட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை, சரியாக கணக்கு கொடுக்காதவர்களுக்குத்தான் பாதிப்பு என்று சொல்லி இருக்கிறார். அதேபோல் பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் கோவையில் பேசியபோது, ஜிஎஸ்டி சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி இருக்கிறார். இந்நிலையில் தான் கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று தொகுதி தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார். 


எட்டு வழிச்சாலை தீர்ப்புக்கு வரவேற்பு

சென்னையில் இருந்து சேலம் செல்லும் எட்டு வழிச்சாலை அறிவித்தபோது ஏற்கெனவே மூன்று வழித்தடங்கள் இருக்கும் நிலையில் விவசாயிகள், விளைநிலங்களைப் பாதிக்கும் எட்டு வழிச்சாலை தேவையில்லை என்று எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். குறிப்பாக இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நடைபயணம் மேற்கொண்டோம். ஆனால் அதை தடுத்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நான் உள்ளிட்ட எங்கள் தோழர்களை கைது செய்ததுடன், வழக்குப்பதிவு செய்தனர். இப்போது எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தேர்தலில் பிரதிபலிக்கும்.


நீட் விலக்கு இல்லை: தமிழகத்துக்கு எதிரான பாஜக

பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்குஅளிப்பது குறித்து எதுவும் குறிப்பிடாதது பற்றி செய்தியாளர் கேள்விஎழுப்பியபோது, நீட் சட்டம் கொண்டு வந்தபோது அதை இங்குள்ள ஆளும் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் எதிர்த்தன. தமிழகத்துக்கு விலக்கு கேட்டன. நீட் தேர்வில் விலக்கு அளிப்பதாக பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அதிமுக அரசுக்கு உறுதியளித்தார்.தமிழக சட்டமன்றத்தில் நீட்விலக்கு கோரி இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிய அந்த மசோதாவின் நிலை பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின்எம்.பி. டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்த அப்போதைய குடியரசுத் தலைவர்பிரணாப் முகர்ஜி, அந்த மசோதா குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு வரவில்லை என்று தெரிவித்தார். மாநில சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றினால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் தான் குடியரசுத் தலைவர் அனுமதி அளிப்பார். அதன்படி நீட் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுக்காததால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் பாஜக ஒப்புதல் அளிக்காததுடன், மாநில உரிமையைப் பறிக்கக்கூடிய நிலையை எடுத்துள்ளது. அதற்கு அதிமுக துணை போகிறது. எனவேபாரதிய ஜனதா, அதிமுக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்றார்.சமஸ்கிருத வகுப்பு நடத்தப் போவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பற்றி கேட்டபோது, ஒருவர் எந்த மொழியையும் விரும்பினால் படிக்கத் தடையில்லை. ஆனால் அதைத் திணிக்கக் கூடாது என தெளிவுபடுத்தினார்.


உண்மையை பிரதிபலிக்காத கருத்துக் கணிப்பு 

கருத்துக் கணிப்பில் மார்க்சிஸ்ட் கட்சி பின்தங்கி இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஊடகங்கள் நடத்தும்கருத்துக் கணிப்புகள் அறிவியல்பூர்வமானது அல்ல. லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு 22 பக்க அறிக்கையில் மூன்று முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒன்று நான்கரை ஆண்டு மோடி ஆட்சி திருப்தியா எனக் கேட்கப்பட்டதில் 10 சதவிகிதம் பேர் மட்டுமே திருப்தி தெரிவித்தனர். 87 சதவிகிதம் பேர்திருப்தி இல்லை என்று கூறினர்.அதேபோல் மோடியை இளைஞர்கள் ஆதரிக்கிறார்களா என்ற கேள்விக்கு 90 சதவிகிதம் பேர் ஆதரிக்கவில்லை என்று கூறியிருக்கின்றனர். மீண்டும் மோடி பிரதமராக வருவதற்கு 60 சதவிகிதம் பேர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு எதிராக இதுதான் எதார்த்த நிலை. அதேசமயம் ஒவ்வொரு வட்டாரத்திலும் தொழில் விவசாய சூழல் வெவ்வேறாக இருக்கும். அங்கு அந்த பகுதி சார்ந்த குறிப்பான பிரச்சனைகள் குறித்து கருத்துக் கேட்டால்தான் உண்மை தெரியும். பொதுவான கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வைத்து மக்கள் மனநிலையை முடிவு செய்ய முடியாது.இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.இந்த பேட்டியின்போது, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப.கு.சத்தியமூர்த்தி, பி.முத்துச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

;