tamilnadu

img

எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் கொலை - கோவை மேற்கு மண்டல ஐஜி ஆய்வு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் குடிபோதையில் இருவர் ரகளை செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்றபோது காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அங்கு தோட்டப்ப ராமரிப்புக்காக திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (60), அவரது மனைவி காமாட்சி, இவர்களது மூத்த மகன் மணிகண்டன் (20) மற்றும் அவரது மனைவி சபீனா ஆகியோர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று அங்கு வந்த மூர்த்தியின் இரண்டாவது மகன் தங்கபாண்டிக்கும் (28), மூர்த்திக்கும் இடையோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் தங்கபாண்டி, மூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது ரோந்து பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ளார். விசாரிக்க வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை, மணிகண்டன் உள்ளிட்ட குடும்பத்தினர் சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இடத்தில் கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், டிஐஜி சசிமோகன், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், குற்றவாளிகளை காவல்துறையினர் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.