tamilnadu

அரசுப் பள்ளியில் படிக்கும் நீதிபதியின் மகன்

திருப்பூர்,ஜூன் 16- திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் வடிவேல். இவர் தனது மகன் நிஷாந்த் சக்தியை அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தார். நிஷாந்த் சக்தி 1 மற்றும் 2ஆம் வகுப்புகளை கோவை, பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 3 முதல் 5ஆம் வகுப்பு வரை திருச்சி, மதுராபுரி அரசு நடுநிலைப்பள்ளியிலும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஈரோடு, குமலன்குட்டை அரசு உயர் நிலைப்பள்ளியிலும் படித்து வந்தார். இதையடுத்து, அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு சேர்ந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக நீதிபதி தனது மகனை அரசு பள்ளியிலேயே படிக்கவைத்து வருவது அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களது குழந்தைகளை அவரவர் ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.