tamilnadu

img

திருப்பூரில் விடுபட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்குக மாவட்ட நிர்வாகத்திடம் சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், ஏப். 6- திருப்பூர் மாவட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் திங்களன்று மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இம்மாவட்டத்தில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் சுமார் 40ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது. குறிப்பாக தனித் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் நியமித்து போர்கால அடிப்படையில் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பணியை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்யும்போது, வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்கு வந்து ஊர் திரும்பிச் செல்ல முடியாமல் உள்ளவர்கள், குடும்ப அட்டைகளை தங்களது சொந்த ஊரில் வைத்துள்ளவர்கள், குடும்ப அட்டைகளே இல்லாதவர்கள், எந்த நல வாரியங்களில் பதிவு செய்யாதவர்கள், பதிவு செய்தும் உரிய காலத்தில் புதுப்பிக்காதவர்கள் உள்ளிட்டு கணிசமான எண்ணிக்கையில்  திருப்பூர் மாவட்டம் முழுவதும்  உள்ளனர். அவர்களுக்கும் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் சிறப்பு ஒதுக்கீட்டில் நிவாரணப்பொருள்களை வழங்க வேண்டும். 

அதே போல் தமிழகத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ1000 வழங்குவது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களிடம் வலுத்து வருகிறது. இக்கோரிக்கைகளை பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

;