ஏழு ஆண்டு காலமாக உயர்த்தப்படாத விசைத்தறி துணி நெசவு கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இவர்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வேலை ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு, நூல் வாங்கி அதனை நெசவு கூலி அடிப்படையில் காடா துணியாக உற்பத்தி செய்து கொடுப்பது. திருப்பூர், கோவை மாவட்டங்களில் தினசரி 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றி அதன்படி கூலி வழங்கப்படும்.
ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றியும் அந்த கூலி உயர்வு வழங்குவதற்கு ஜவுளி வியாபாரிகள் மறுத்துவிட்டனர். விசைத்தறியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் பல்லடம் இரகத்திற்கு 20 சதவீதம், சோமனூர் இரகத்திற்கு 23 சதவீதம் என கூலி உயர்வு வழங்க அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த கூலி உயர்வையும் வழங்காமல் ஜவுளி வியாபாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இதை கண்டித்து ஜனவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் அறிவித்தனர். அதன்படி திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி முடங்கியுள்ளது.
மேலும் இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறி துணி வியாபாரிகளுக்கு நெசவு கூலி உயர்வு வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.