tamilnadu

ஜிஎஸ்டி ரீ பண்ட் கிடைக்கவில்லை எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் புகார்

திருப்பூர், ஏப். 13-திருப்பூர் பனியன் தொழிலில் சார்புத் தொழிலாக உள்ள எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி செலுத்தினாலும், அதற்குரிய ரீ பண்ட் தொகை கடந்த 9 மாதங்களாக கிடைக்கவில்லை என்று திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திருப்பூர் குமரன் சாலை ஜி.எஸ்.டி சரக அலுவலகத்தில் ஜி.எஸ்.டி கவுன்சில் உதவி ஆணையர் அலுவகலத்தில் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் வெள்ளியன்று மனு அளித்தனர். மத்திய அரசு ஜி.எஸ்.டியை அமல்படுத்திய பின்னர் பல்வேறு பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. எலாஸ்டிக் பொருட்களுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் செலுத்தப்படும் வரியில் குறிப்பிட்ட சதவிகித வரியை ரீபண்ட் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தது. ஆனால் ரீபண்ட் தொகையைப் பலர் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 9 மாதங்களாக ரீ பண்டு தொகை கிடைக்காமல் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம். இந்த தொகை கிடைத்தால் தொழிலை தொய்வின்றி செய்ய உதவியாக இருக்கும். எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையை சிரமம் இன்றி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என இம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர். கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் தரப்பில் உறுதியளித்ததாகவும் தெரிவித்தனர்.  

;