tamilnadu

img

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும் திருக்கோவில்கள்... தமிழக அரசிடம் கன்னியாகுமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கம் புகார்...

நாகர்கோவில்:
குமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:\

வெளிப்படையான நிர்வாக நோக்கில் கோவில்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்கள் முதலியவற்றை வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டி பிறப்பிக்கப்பட்ட  தமிழ்நாடு அரசின் உத்தரவு, நல்லுள்ளம் கொண்ட அனைவரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, மற்றும் அந்நியர் ஊடுருவல் ஆகியவற்றைபற்றி துறை நிர்வாகிகளிடம் பலமுறை எடுத்து கூறினாலும், கண்டு கொள்ளாத நிலையில் இன்று பலகோவில்களில்அந்நியர்கள் மட்டுமில்லாது  அயல்மாநிலத்தவர்கள் கூட அத்துமீறி நிர்வாகம் செய்யும் அளவுக்கு சென்றுள்ளது. “கோவில்களை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு அறநிலையத்துறை வெளியேறட்டும்” என்ற கோரிக்கையோடு களமிறங்கிவிட்டனர்.     

கொடியவர்களின் கூடாரமாக...
போதிய எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாததால் கோவில்களில் கொள்ளையும், திருட்டும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. பூசாரி இல்லாத கோயில்களில், பக்தர்களின் தேவைக்கு கோவிலிருக்கும் தலத்திலுள்ள “அந்நியர்கள்” ஏற்பாட்டில் பூஜை நடைபெறுகிறது. கோவில்களின் “அனாதை” நிலைமையை பயன்படுத்தி “இறைத்தொண்டு” என்ற பெயரில் உள்ளே நுழையும் அந்நியர்கள் தங்களது விருப்பத்துக்கு நிகழ்ச்சி நிரலை கோவில் அதிகாரிகளின் துணை கொண்டு தங்கு தடையின்றி செயல்படுத்தி வருகின்றனர்.மன்னர்களின் கருவூலத்திற்கு மட்டுமே உரிமைப்பட்ட சொத்துக்கள், வரி வசூலை உறுதிப்படுத்திட காலப்போக்கில் கோயில் பெயருக்கு உரிமை மாற்றம்(பண்டார ஒற்றி) செய்யப்பட்டது. இவை தவிர நன்கொடையாளர்கள் தானமாக கொடுத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், நேர்ச்சையாக அளிக்கப்படும் தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவற்றை அவ்வப்போது புகைப்படம் எடுத்து, மதிப்பீடு செய்து, பதிவேடுகளில் பாதுகாத்திட வேண்டும் என்பது விதி. ஆனால் 1958 இல் முதல் மதிப்பீடும், 1988 இல் மறுமதிப்பீடும், 1997 இல் காலமுறை மதிப்பீடும் மட்டுமே செய்துள்ளதாக நிர்வாக கோப்புகளிலிருந்து தெரிய வருகிறது. அதிகாரிகளின் இத்தகைய அலட்சியப் போக்கால் 1992 இல் நடைபெற்ற திருவையாறு அருள்மிகு ஆதிகேசவன் கோவிலில் கொள்ளை போன நகைகளையும் தங்கம்,வெள்ளி மற்றும் பஞ்சலோகங்களான பொருள்களை துல்லியமாக அடையாளம் காண முடியாத நிலைமை ஏற்பட்டது.

திருக்கல்யாணம், தேர்த் திருவிழா, சூரசம்ஹாரம், நவராத்திரி, மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற பிரதான திருவிழாக்காலங்களில், திருக்கோயில்கள் “அந்நியர்களின்” வேட்டைக்காடாக மாறிவிடுகின்றன. சுயமாகவே, எவர் அனுமதியுமின்றி ரசீது அச்சடித்து லட்சக்கணக்கில் பணமும், பொருளும் வசூல் செய்கின்றனர். “லட்சதீபம்”, “லட்சார்ச்சனை” என்ற பெயர்களில் நடைபெறும் கொள்ளைக்கு அளவே இல்லை. நிகழ்ச்சிகள் தொடர்பாக இவர்கள் வெளியிடுகின்ற வரவேற்பிதழ்களில், குறிப்பிட்ட கோயில்களின் ஸ்ரீகார்யம், மேலாளர், தொகுதி கண்காணிப்பாளர், எல்லாவற்றிக்கும் மேலாக “இணை ஆணையர்” பெயர்களும் வரவேற்பாளர்களாக இடம் பெறுவதுதான் அதிசயமான உண்மையாகும். ஆண்டுதோறும் 12 சிவத்தலங்களைத் தொட்டு நடைபெறும் சிவாலயஓட்டத்தின் போது, காணிக்கையாக வசூலாகும் பல லட்சங்களை இவர்கள் சுருட்டிக் கொள்ளத் தவறுவதில்லை. ஆங்காங்கே பணியிலிருக்கும் நிரந்தர ஊழியர்கள், அதே கோயில்களில் தொடர்வதா, வேண்டாமா என்ற முடிவுகளும் இவர்கள்தான் எடுக்கிறார்கள்.

தடையின்றி தொடரும் மூளைச்சலவை
அநேகமான திருக்கோவில் வளாகங்களில், “யோகா பயிற்சி”, “ஆன்மீக வகுப்புகள்” என்ற போர்வையில் மூளைச்சலவை செய்யும் பணி தடையின்றி நடந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா (Shaka) பயிற்சி என்ற போர்வையில், அமைதியாக இருக்கும் மக்கள் மத்தியில் “ஒரு தேசம் - ஒற்றை கலாச்சாரம்” என்ற போதனையின் மூலம், விரிசல்களை உருவாக்கிடவும், அதன் மூலம் அரசியல் லாபம் காணவும் திட்டமிட்டு பணிகளை செய்து வருகின்றனர். கோவில்களின் அன்றாட நிகழ்வுகளில் “சட்டாம்பிள்ளை” தனமாக தங்களை ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரால் “சேவா சங்கம்”, “பக்தசபா”, “கலாமன்றம்” என்ற போர்வையில் சில அதிகாரிகளின் ஆசியுடன் செயல்படுகின்றனர். எச்ஆர்இசிஇ சட்டம் 116 - A பிரிவின் கீழ் இவை தடை செய்யப்பட வேண்டும். சட்டமிருந்தாலும் அதனை பயன்படுத்தி இத்தகைய இறை விரோத செயல்களை தடுத்து நிறுத்திட, துறை அதிகாரிகள் இதுகாறும் முன்வரவில்லை.அன்றாட பூஜை பொருட்கள் வாங்கிட துறையிடமிருந்து “மகமை” பணம் வாங்கப்படுகிறது. ஆனால் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் பொருள்களைக் கொண்டு, பூஜைகளை நடத்திவிட்டு, வெளியிலிருந்து விலைக்கு வாங்கியதாக ரசீதும், பில்லும் தயார் செய்து ஆண்டுதோறும் கொள்ளை போகும் பல லட்சங்களில்  அதிகாரிகளுக்கும் பங்கு உண்டு.

பணியாளர்களின் பரிதாப நிலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களும்நிர்வாக வசதிக்காக, நாகர்கோவில், பத்மநாபபுரம், செங்கோட்டை, பூதப்பாண்டி, குழித்துறை என 5 பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் தெய்வங்களின் தன்மை மற்றும் தொன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அர்ச்சகர்கள், காவலர்கள், தவில் - நாதஸ்வரம் - பஞ்சவாத்தியம், தூப்பு (துப்புரவு), தனி, மாலைகட்டு, யானைப் பாகன், பாத்திரம் தேய்ப்பு ஆகிய பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் இருந்தனர். தமிழக இணைப்பின் போது 1243 பேர் பணியாற்றி வந்தனர். 2000 ஆம் ஆண்டு தனி அலுவலக பதிவேட்டின் படி 1046 பணியாளர்கள் இருந்துள்ளனர். ஓய்வு மற்றும் மரணம் நிமித்தம்ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் தற்போது 515 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் 10 ஆண்டு காலமாக நிரப்பப்படாமல், கோயில்கள் பாதுகாப்பும், பராமரிப்பும் அற்ற நிலையில் உள்ளன. பிரசித்தி பெற்ற கோவில் முதல் சிறிய கோவில் வரையிலும் மொத்தம் தேவைப்படும் பூசாரிகள் (மேல்சாந்தி, கீழ்சாந்தி) 558 பேர் பணியிலிருக்க வேண்டும். ஆனால், மொத்தமுள்ள 515 பணியாளர்களில் தற்போது பணியிலிருக்கும் பூசாரிகளின் எண்ணிக்கை சுமார் 120 மட்டுமே. அதுபோலவே பெரிய கோவில்களுக்கு குறைந்தபட்சம் 2 காவலர்கள் கணக்கிட்டால் 200 காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் களில் இணைப்பிற்கு பின்பும், கேரள பூஜை முறைகளே தொடர்கின்றன. பணியாளர்களின் தகுதியும், தன்மையும்வேறுபட்டவை அல்ல. ஆனால், கேரளத்தில் கோயில்ஊழியர்களுக்கு மாநில அரசு கடைநிலை ஊழியர்களுக்கான ஊதிய விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டபணியாளர்களுக்கும், 1997 - லிலும் 2007 - லிலும் அரசுஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க ஆணைப்பிறப்பித்த பின்பும் குமரி மாவட்ட நிர்வாகம் அதை வழங்கிட முன்வரவில்லை. “சில்லறை செலவின” ஊழியர்களென தரம் பிரித்து, மிகவும் குறைவான ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதிலும் 2019 ஆணைப்படியான நிலுவை ஊதியம் இதுவரை வழங்கப்படாமல், இந்த பேரிடர் காலத்தில் எவ்வித நிவாரணமும் இல்லாமல் பணியாளர்கள் அல்லல் படுகின்றனர்.

ஊழியர்களின் கோரிக்கைகள்

கோவில்களை பராமரித்து, பாதுகாத்து, கொள்ளையர் கூட்டத்தினை வெளியேற்றி, பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கி  குமரி மாவட்ட ஆலயங்களில் விடியல் ஏற்படச் செய்திட வேண்டும். 

1. எச்ஆர்இசிஇ சட்டத்தின் படி அனுமதிக்கப்படாத - கோவில் காரியங்களில் அத்துமீறி செயல்படும் அந்நியர்களை (Strangers) உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

2. மத நல்லிணக்கம், பன்முகத்தன்மை, சகிப்பு மனப்பான்மை ஆகிய உயரிய பண்புகளுடன் இயங்கும் மக்கள் மத்தியில் பிளவுவாத, போலி தேசியவாத நிகழ்ச்சி நிரலைநடைமுறைப்படுத்த கோயில் வளாகங்களை பயன்படுத்தி வரும் கொடியவர்களிடமிருந்து ஆலயங்களை பாதுகாத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. கோயில் பாதுகாப்பிற்கும், பராமரிப்பிற்கும் தேவையான பணியாளர்களை காலதாமதமின்றி நியமனம் செய்திட வேண்டும்.

4. ஆலய ஊழியர்களுக்கு, 1997 மற்றும் 2007 அரசாணைவழங்குகின்ற பயன்களின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்து, அல்லல்படும் ஊழியர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.