tamilnadu

img

திருப்பூர்: அரசுப் பள்ளி வாயிலை மறித்து எடப்பாடி பழனிச்சாமியின் கட் அவுட் – மாணவர்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்காக அக்கட்சியினர் என்.ஜி.ஆர் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி வாயிலை மறிக்கும் வகையில் கட் அவுட் வைத்திருந்தனர். இதனால், அப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக பல்லடத்திலும் இன்று மாலை பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக பல்லடம் அதிமுக நிர்வாகிகள் சார்பில் பேனர்கள், கொடிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் என்.ஜி.ஆர் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வாயிலை மறித்து கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா. எடப்பாடி பழனிச்சாமியின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.3 00 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் அரசுப் பள்ளியின் வாயிலை மறித்து வைக்கப்பட்ட பேனரால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். பள்ளி வாயிலை மறித்து அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.