tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.7 லட்சம் நிலம் வழங்கிய பெரியவர்..... 24 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதிப்படி ....

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 24 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடுத்த வாக்குறுதிப்படி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள 2 சென்ட் நிலத்தை பெரியவர் ஒருவர் தானமாகக்கொடுத்தார்.

திருப்பூர் ஓடக்காடு பகுதியில் வசிப்பவர் துரைசாமி. இவருக்கு தற்போது 88 வயது ஆகிறது. இவர்திருப்பூர் ஓடக்காடு ஸ்ரீ சௌடாம் பிகை நெசவாளர் கூட்டுறவு சங்கத் தின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்குச் சொந்தமான இடம் வஞ்சிபாளையம் சௌடாம்பிகை நகரில் உள்ளது. கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இவர், அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சென்ட் நிலம் தானமாகத்தருவதாக வாக்குறுதி அளித்திருந் தார்.இந்நிலையில் அண்மையில் இவருக்கு 88ஆவது பிறந்தநாள் வந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான பி.முத்துசாமி அவரைச் சந் தித்து வாழ்த்துத் தெரிவித்ததுடன், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 24 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தானமாகத் தருவதாகக் கூறியதை நினைவூட்டி இருக்கிறார். உடனே பெரியவர் துரைசாமி தனது வாக்குறுதிப்படி சௌடாம்பிகை நகரில் 2 சென்ட் இடத்தைதானமாக மார்க்சிஸ்ட் கட்சிக்குத் தருவதாக மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன் பெரியவர் துரைசாமியின் விருப்பப்படி மார்க்சிஸ்ட் கட்சிக்கு இடம் தருவதற்கு அவரது இரு மகன்கள் து.ரவி கணேசன், து.செந்தில்குமார் ஆகியோரும் மனப்பூர்வமாக இசைவு தெரிவித்தனர்.

அதன்படி அவரது பிறந்த நாள் நிறைவடைந்த நூறாவது நாளில், நவம்பர் 9ஆம் தேதி அவரது இல்லத்தில், 2 சென்ட் இடம் தானக் கிரயம்செய்த பத்திரத்தை அவர் மார்க்சிஸ்ட்கட்சியினரிடம் வழங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி ஆகியோர் தானக்கிரயப் பத்திரத்தை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, புதுப்பாளையம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் முருகன், விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகி மோகனசுந்தரம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 24 ஆண்டுகளுக்கு முன்பு தான்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பெரியவர் துரைசாமிக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.   (ந.நி)