tamilnadu

குடிக்க தண்ணி இல்ல; ஓட்டு கேட்டு வர்ரீங்க! அதிமுக வேட்பாளரிடம் மக்கள் வாக்குவாதம்

திருப்பூர், ஏப். 13 - அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, எங்களுக்குக் குடிக்கத் தண்ணி இல்லை, ஆனா ஓட்டு கேட்டு மட்டும் வந்திர்ரீங்க! என்று பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பாண்டியன் நகர், அண்ணாநகர், நெருப்பெரிச்சல், பூலுவபட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளியன்று காலை முதல் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாண்டியன் நகர் பகுதியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து, கடந்த 10 நாட்களாக எங்களுக்குத் தண்ணீர் வரவில்லை என்று ஆனந்தனிடம் முறையிட்டனர். அப்போது திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய குழாய்கள்பொருத்தும் பணியும் வேகமாக நடந்து வருகின்றன. குடிநீர் வரும் என்று ஆனந்தன் கூறினார். பதிலுக்கு பெண்கள் இப்பிடிதான் சொல்றீங்க, ஆனா எப்பப் பார்த்தாலும் எங்களுக்குத் தண்ணி கிடைக்கிறதில்லை என்று கூறியுள்ளனர்.


நான்தான் சொல்கிறேனே, எல்லாம் செஞ்சு தர்ரோம், மறுபடியும் இதையே பேசினால் என்ன அர்த்தம்என்று ஆனந்தன் பதிலுக்கு குரலை உயர்த்தி கூறியிருக்கிறார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், குடிக்கத்தண்ணி இல்லைனு கேக்குறோம், அதோட ரோடும் குண்டும்குழியுமா பல நாளா நாங்க கஷ்டப்படுறோம், ஆனா இப்ப நீங்க ஓட்டுக் கேட்டு வர்ரீங்கன்ன உடனே ரோடு புதுசா போடுறாங்க, நாங்க இதைக் கேட்கக்கூடாதாஎன்று கேள்வி எழுப்பினர். வாக்குவாதம் அதிகரித்தநிலையில் வேட்பாளர் ஆனந்தனும், உடன் சென்ற அதிமுகவினரும் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.இதேபோல் பாண்டியன் நகர் அருகே டீச்சர்ஸ் காலனி, நல்லப்பா காலனி ஆகிய பகுதிகளில் வடிகால் கட்டுமானப் பணி நீண்ட நாட்களாக அரைகுறையாக நிற்கும் நிலையில், கழிவுநீர் வீதிகளில் தேங்கி இருந்ததால், அப்பகுதி மக்கள் வேட்பாளர் ஆனந்தனை வாகனத்தை விட்டு இறங்கி வந்து பாருங்கள் என்று அழைத்தனர். எனினும் இப்பணிகள் விரைவில் முடிந்துவிடும். பாதாளச் சாக்கடை கட்டித் தருகிறோம் என்று சொல்லிவிட்டு அதிமுகவினர் புறப்பட்டுச் சென்றனர்.

;