tamilnadu

img

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உருவாகும்

திருநெல்வேலி, ஏப்.22-மக்களின் தீர்ப்பின்படி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் உருவாகும் என நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.ரஷ்ய புரட்சியின் நாயகன் தோழர் லெனினின் 149-வது பிறந்தநாள் திங்களன்று கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநெல்லை மாவட்டக்குழு அலுவல கத்தில் அமைக்கப்பட்டுள்ள லெனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஅரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் லெனின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலின் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்துள்ளன. கேரளம் உள் ளிட்ட சில மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் கடந்த 18-ம் தேதி நிறைவடைந்துள்ளது. மே 19-ம் தேதி ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மேலும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.மே மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மக்கள் தீர்ப்பின்படி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் உரு வாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆவணங்களுக்கு பலத்த பாதுகாப்பு உள்ள நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் குறிப்பாக மதுரை மேற்கு தொகுதி ஆவணங்கள் இருக்கும் பகுதிக்கு ஒரு அரசு அதிகாரியுடன் சிலர் திடீரென உள்ளே சென்று 3 மணி நேரம் வரை உள்ளே இருந்துவிட்டு ஆவணங்களை நகலெடுத்துள்ளனர். இதனை காவ லர்கள் தடுத்தபோது மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சம்பந்தப் பட்ட அதிகாரியை அழைத்துச் சென்றுள்ளனர். 


மூன்றடுக்கு பாதுகாப்பு உள்ள பகுதிக்கு அரசு அதிகாரி ஒருவர் சென்றது பல கேள்விகளை எழுப்பி யுள்ளது. இதுதொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் எங்களது வேட்பாளர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது முறையாக பதி லளிக்கவில்லை. இதுகுறித்து மாநில தலைமைத் தேர்தல் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியிடை நீக்கம் செய்திருப்பது போதாது. விதிமீறிய செயலுக்கு உடன்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது சரியாக இருக்காது. இதுகுறித்து தில்லியில் தேர்தல்ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள் ளது. சம்பந்தப்பட்ட ஆட்சியரை இட மாற்றம் செய்ய வேண்டும். உயர்மட்ட விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம். சட்டமன்ற இடைத்தேர்தல்களை ஒத்திவைக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால், நீதிமன்றத் தின் தலையீட்டால்தான் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இப்போது இடைத்தேர்தல் முடிந்துள் ளது. 


தமிழகத்தில் பிரதமர் மோடி, ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பலை வீசு கிறது. ஆகவே, மக்களவைத் தேர்தல்மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர் தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும். இலங்கையில் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்பு மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்டச் செய லாளர் கே.ஜி.பாஸ்கரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி, மாநில குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

;