tamilnadu

வேலூர் ,திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் முக்கிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் கொடுமை: தந்தை-மகன் கைது

வேலூர், மே 8-சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, மகனை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே புலிக்குட்டை கிராமத் தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (75). அவரது மகன் கிருஷ்ணன் (45) ஆகிய இருவரும் மளிகை வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடையில் பொருள் வாங்க வந்த 13 வயது சிறுமியை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தாய் விஜயா அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வெங்கடாசலம், கிருஷ்ணன் ஆகிய இருவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


மணல் திருடிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை,மே.8-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், சேதாரம்பட்டு (மதுரா) முனியன் குடிசை கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் மகன் வெற்றிவேல். முனியன் குடிசை கிராமத்தில் அமைந்துள்ள நாக நதியில் மணல் தோண்டப்பட்ட திட்டுக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கால் தடுமாறி பள்ளத்தில் விழுந்தார். அப்போது, மணல்கள் சரிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்தான்.இச்சம்பவம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் க. சு. கந்தசாமி உத்திரவிட்டார். அதன் பேரில் போளூர், ஆரணி வட்டங்களைச் சேர்ந்த மணல் திருடர்கள் 11 பேர் மீது களம்பூர் காவல் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வாக்குச்சாவடி ஆட்சேபம்: கருத்து தெரிவிக்கலாம்

விழுப்புரம், மே 8-விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் கடந்த மாதம் 22–ஆம் தேதியன்று ஒப்புதல் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 4–ஆம் தேதியன்று இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது இறுதி வாக்குச் சாவடி பட்டியலை வெளியிடத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வருகிற 14–ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளது.எனவே, பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தல் குறித்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்பாகக் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனை ஏதும் இருந்தால் வரும் 10 ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் தெரிவிக்கலாம். இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வரும் 14–ஆம் தேதியன்று வெளியிடப்படும் என ஆட்சியர் சுப்பிரமணியன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

;