tamilnadu

img

தவறான சிகிச்சையால் வாலிபர் மரணம் நிர்கதியான குடும்பம்

திருத்துறைப்பூண்டி, மே 5- திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பாமணி ஊராட்சி பட்டவர்த்தி நெடுந்திடலில் வசித்து வந்தவர் நாகராஜன் மகன் சரவணன்(41), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இவருக்கு மனைவி மற்றும் மகன் விஸ்வா(13) உள்ளனர். இவர், கடந்த 2 ஆண்டாக கோவையில் பிளம்பிங் வேலை செய்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மகன் விஸ்வாவை தன்னுடன் கோவைக்கு அழைத்து சென்றார். அவருக்கு தலையில் வேர்வை கட்டி இருந்ததால் கடந்த மே 2-ம் தேதி மாலை 6 மணிக்கு காளப்பட்டி விளாங்குறிச்சி சாலையில் உள்ள ஸ்ரீபாலாஜி மெடிக்கல் சென்டரில் டாக்டர் டி.உமாராணியிடம் அணுகினர். பின்னர் தனக்கும் தொண்டை வலி உள்ளது என்று கூறியுள்ளார். அப்போது அவருக்கு கையில் ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதித்து விட்டு இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் வெளிவரவே பாலாஜி மெடிக்கல் சென்டர் மருத்துவர், நான் எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை. ஊசியும் போடவில்லை என்று மறுத்துள்ளார். இதைதொடர்ந்து கோவை சிபிஎம் தலைவர்கள் மற்றும் சரவணனின் உறவினர் கே.சக்திவேல் ஆகியோர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சரவணனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், தவறான சிகிச்சை காரணமாக அவர் இறந்துள்ளார் என்று புகார் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், இறந்த சரவணனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். சரவணனின் மனைவி மற்றும் தாயார், தந்தை கதறி அழுதனர். அப்போது அவரது மனைவி கூறுகையில் எனக்கும் எனது மகனுக்கும் துணையாக இருந்த எனது கணவர் இறந்து விட்டார். இனிமேல் எனது மகனை எப்படி வளர்ப்பேன் என்று கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. சரவணனின் குடும்பமும், அவரது மகனின் படிப்பும் கேள்விக் குறியாகி உள்ளது. உடனடியாக அரசும், காவல்துறையும் துரிதமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் வலியுறுத்தி உள்ளார். நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.கே.வேலவன் ஆகியோர் உடனிருந்தனர்.  

;