கொல்கத்தா
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த ஆட்கொல்லி வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளைக் கையாண்டு வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பிரபலமாகுவதற்காகச் சிலர் போலியான செய்திகளைப் பதிவிட்டு பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் போலீசார் சமூக வலைத்தளங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கொரோனா பரவல் குறித்து போலியான தகவலை வெளியிட்டதாக 30 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன கூறினார்?
தனது வாட்ஸ் அப் குரூப்பில் அந்தப் பெண் வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பில்,"கொல்கத்தாவின் நியூ அலிபூர் பகுதியில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மாநில அரசாங்கம் தகவல்களை மறைப்பதாகவும்"பதிவிட்டுள்ளார். இந்த தகவலைக் கண்ட கொல்கத்தா நகர வாசிகள் நியூ அலிபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கொரோனா பரவல் குறித்து தவறான தகவலை வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கும்படி அட்மினுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.