தஞ்சாவூர், மே 31-தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வனக்குடி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகள் சரண்யா(22). கும்பகோணம் காமராஜ்நகர் ரவீந்திரன் மகன் சுரேஷ்(23). இவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்து போது இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 7 ஆண்டாக பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்தனர்.இந்நிலையில் சரண்யா கும்பகோணம் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். சுரேசும், கும்பகோணம் பகுதியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரியவரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை பெற்றோர் இல்லாத நேரத்தில் சுரேசின் வீட்டிற்கு சரண்யா சென்றுள்ளார். அங்கு சுரேஷ் தாலி, பட்டுப் புடவைகள் உள்ளிட்டவை வாங்கி வைத்துள்ளார். பின்னர் சுரேஷ் வீட்டின் பூஜை அறையில் வைத்து சரண்யாவிற்கு தாலி கட்டினார். பின்னர் இருவரும் விஷம் குடித்து மயங்கினர். வெளியில் சென்றிருந்த சுரேசின் பெற்றோர் வீட்டிற்கு வந்த போது அதிர்ச்சி அடைந்து மயங்கி கிடந்தவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.7 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து பெற்றோர் எதிர்ப்பால் சாவிலாவது ஒன்று சேரலாம் என முடிவெடுத்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.