tamilnadu

img

தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப்பணியை முடக்கிய பாஜக தலைவர் கேரளத்தின் பொது எதிரி

திருவனந்தபுரம், மே 6-தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப்பணிக்கான நில எடுப்பை நிறுத்துமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு பாஜக மாநில தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை கடிதம் எழுதியுள்ளார். அவரையும் அவரது கட்சியையும் கேரளம் மன்னிக்காது என கேரள நிதி அமைச்சர்டி.எம்.தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையிலான கருத்துவேறுபாடாக இதைகுறைத்து மதிப்பீடு செய்துவிடக்கூடாது. ஸ்ரீதரன்பிள்ளையை கேரளத்தின் பொது எதிரியாக அறிவித்து சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.      இதுகுறித்து தாமஸ் ஐசக் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கேரளத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் அரிய வாய்ப்பாக கருதி பாஜக மாநிலத்தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை கடிதம் எழுதி உள்ளார். கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சியை புரட்டிப்போடும் அவரை கேரளத்தின் பொது எதிரியாக பிரகடனம் செய்து சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும். அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையிலான கருத்துவேறுபாடாக இதை குறைத்து மதிப்பீடு செய்துவிட முடியாது. கேரளத்தின் எதிர்கால வளர்ச்சியை பின்வாயில் வழியாக புரட்டிப்்போட்ட பிறகு வெள்ளைச் சிரிப்புடனும், இனிப்பான வார்த்தைகளாலும் நம்மை மீண்டும் வஞ்சிக்க அவரை அனுமதிக்க வேண்டுமா என்பதை நாட்டுமக்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த ஆட்சி காலத்தில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப்பணி நடக்காது என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதிப்படுத்துகிறது. கேரளத்துடன் மோடி அரசு பழிதீர்த்துக் கொள்வது இதன் மூலம் தெளிவாகிறது. அதற்கான ஊன்றுகோலாக பாஜக மாநிலத் தலைவர் உள்ளார். எப்படியாவது கேரளத்தை நாசப்படுத்தவும் பின்னோக்கி இழுக்கவுமே அவர் இயன்றவரை முயற்சிக்கிறார் என்பதற்கான மற்றுமொரு சான்றாகும் இது.2020இல் திட்டப்பணிகளை முடிக்க போர்க்கால அடிப்படையில் மாநிலத்தின் பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறது பினராயி விஜயன் அரசு. தொண்டயாடு, ராமநாட்டுகர, வைற்றில, குண்டன்னூர் மேம்்பால நிர்மாண பொறுப்பை மாநில அரசு ஏற்றுக்கொண்டது. கடந்த டிசம்பரில் தொண்டயாடு, ராமநாட்டுகர மேம்பாலங்கள் நாட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. வைற்றில, கண்டன்னூர் மேம்பாலங்களின் கட்டுமான பணிகள் ‘கிப்பி’ பொறுப்பேற்று அதிவிரைவில் பணிகளை முடித்து வருகிறது. கரமன – களியக்காவிளை சாலையும் கிப்பியுடன் இணைத்து நான்குவழி பாதையாக மாற்றும் பணி முன்னேற்றத்தில் உள்ளது.

சவால்களை எதிர்கொள்ளமுடியாமல் 2013இல் உம்மன்சாண்டி அரசு கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப் பணியை கைவிட்டது. நிலம் கையகப்படுத்துவதே முக்கிய சவாலாக இருந்தது. ஆனால், எல்டிஎப் அரசு ஒவ்வொரு பிரச்சனையாக கையாண்டது. கண்ணூர், கீழாற்றூர், மலப்புறம் உள்ளிட்ட பல இடங்களிலும் பாஜகவும் யுடிஎப் தலைவர்களும் திசைதிருப்பலுக்கும், கலவரங்களுக்கும் முயன்றும் முடியவில்லை. நிலம் கையகப்படுத்த 3-ஏ அரசாணை பிறப்பித்து திட்டத்தை முன்னெடுத்தபோது அரசியல் பகை தீர்க்க மத்திய அரசு திட்டத்தை முடக்கியுள்ளது.நவீன கேரளத்தின் முதுகெலும்பு நான்குவழி தேசிய நெடுஞ்சாலை. வளர்ச்சிக்கான லட்சியங்களை மிகவேகமாக சாத்தியமாக்க முதலாவது தேவை தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி. எதிர்கால தலைமுறையின் வளர்ச்சியை எளிதாக்கும் இந்த முக்கியமான தேவையை பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை துச்சமென தூக்கி எறிந்துள்ளார். அவருக்கும் அவரது கட்சிக்கும் கேரளம் மன்னிப்பு வழங்காது.

;