ஊரகத் துறை அலுவலர் சங்க அமைப்பு தினம்
தரங்கம்பாடி, செப்.14- தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் அமைப்பு தினம் வட்டார செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. வட்டாரத்தலைவர் கோவி.வெங்கடேசன் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அந்துவன் சேரல் மற்றும் இணைச் செயலாளர் இளவரசன், நடராஜன் மற்றும் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் செம்பனார்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான தியாகராஜன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். அரசு ஊழியர் சங்க வட்டத்தலைவர் மாரி.தெட்சிணாமூர்த்தி மற்றும் சங்கங்களின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார செயலாளர் ஜீவா நன்றி கூறினார்.
ஆண்டாளூர் பொதுக் குளத்தை பயன்படுத்த தலித்துகளுக்கு அனுமதி மறுப்பு
சிபிஎம் கண்டனம்
கும்பகோணம், செப்.14- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா அருகிலுள்ள ஆண்டாளூர் கிராமத்தில் உள்ள ஊர் பொது குளத்தை தலித்துகள் பயன்படுத்த ஆதிக்க சாதியினர் மறுத்து வருகின்றனர். இது குறித்து சிபிஎம் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் கூறியதாவது, கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாளூர் கிராமத்தில் சுமார் ஆதிதிராவிடர் 70 குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மற்ற வகுப்பினர் 40 குடும்பத்தினரை சேர்ந்தவர்களும் வசித்து வருகிறார்கள். இருவருக்கும் பொதுவாக நல்ல தண்ணீர் குளம் என்ற பெயருடைய ஊர் பொது குளம் உள்ளது குளத்தில் இருபாலரும் பல ஆண்டு காலமாக குளிப்பது துணி துவைப்பது மாடு குளிப்பாட்டுவது போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருடா வருடம் அக்குளத்தில் வளரும் மீன் பிடிப்பதற்காக ஊர்வாசிகள் பொது ஏலம் விடப்பட்டு வந்தது ஆனால் அப்போது ஏலத்தில் சில ஆதிக்க சாதியினர் மட்டும் ஏலம் எடுத்து ஏல தொகையும் அவர்களே பயன்படுத்தி வந்தனர் ஏலம் எடுப்பதற்கு தலித் சமூகத்தினர் கலந்து கொண்டு ஏலம் கேட்டாலும் கொடுப்பதில்லை ஆனால் ஆதிக்க சாதியினர் மீன் பிடிப்பதற்கு ஏலத்தை அவர்களே எடுத்துக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதுபோன்று பல முறை ஊருக்குப் பொதுவான குளத்தை ஏலம் தொடர்பாக ஏலம் கேட்க சென்றாலும் உங்களுக்கெல்லாம் ஏலம் விட முடியாது என தலித்துகளை தடுத்து வருகின்றனர் இதனால் அவ்வூரில் வாழும் தலித் சமூகத்தினர் குளத்தை ஏலம் எடுக்க முடியாமல் இருந்து வருகிறது எதிர்காலத்திலும் அங்கு வாழும் தலித் சமூகத்தினர் பயன்படுத்தக் கூடாது என கூறி வருகின்றனர் கோடை காலங்களில் சில சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் ஒன்றிய குழு உறுப்பினர் ரங்கசாமி விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் இளங்கோவன் மற்றும் அவ்வூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சம்பத் மற்றும் அவ்வூர் தலித் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினருக்கு இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதன் புகார் தொடர்பாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் இருவரையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற திங்கட்கிழமை சமரசப் பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பேச்சுவார்த்தையில் ஊருக்குப் பொதுவான குளத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு ஊராட்சி அதிகாரிகள் முன் அனைவரும் பாரபட்சமின்றி ஏலம் எடுத்து பயன்படுத்த வழிவகை செய்ய வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.