tamilnadu

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

தரங்கம்பாடி, ஜூலை 12- நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் அப்பங்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரை திருமணம் செய்து கொ ள்வதாக கழுக்காணிமுட்டம் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் மகன் அலெக்ஸா ண்டர்(22) என்ற சுந்தர், அப்பெண்ணிடம் கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு 10.30 மணியளவில் கழுக்காணிமுட்டம் கோயில் அருகே வருமாறு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலெக்ஸாண்டர் போன் செய்து வரச் சொல்லியதை நம்பி அங்கு சென்ற அப்பெண்ணை, வெளிநாடு சென்று வந்த புதுமாப்பிள்ளையான வினோத்(26), சாராய வியாபாரியான அம்மாயி(27), வின்சென்ட்(27) ஆகிய 4 பேரும் சேர்ந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ரேகா மயங்கிய நிலையில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரத்தில் தூக்கி வீசி சென்றனர். பலத்த காயங்களுடன் உடைகள் எதுவுமின்றி கிடந்தார். நள்ளிரவில் அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் முனகல் சத்தம் கேட்டு பார்த்து இதுகுறித்து தகவல் சொல்லியதையடுத்து மீட்டு வந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். மாற்றுத்திறனாளி பெண் உயிருக்கு போராடி வரும் நிலையில் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்வதற்கு பதிலாக ஒரு நபர் மீது மட்டும் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. சாராய வியாபாரியான அம்மாயிக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் ஜி.கலைச்செல்வி தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் லதா, பொருளாளர் சுபாதேவி, மாவட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி, வட்டக்குழு உறுப்பினர்கள் வேம்பு, வளர்மதி, ராஜேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீதும் உரிய வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மருத்துவ பரிசோதனையை நேர்மையாக நடத்த வேண்டும், அக்குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவை மாதர் சங்கம் சார்பில் கோட்டாட்சியரிடம் வழங்கினர். உரிய நடவடிக்கை இல்லையெனில் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்து கலைந்து சென்றனர்.
 

;