கரூர், மே 12-உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் 2-வது மாவட்ட மாநாடு, ஒருங்கிணைப்புக் குழு இணை அமைப்பாளர் சாந்தி தலைமையில் கரூரில் ஞாயிறன்று நடைபெற்றது. தீர்மானத்தை சுதா முன்மொழிந்தார். பத்மாவதி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டினை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் பேசினார். வேலை அறிக்கையை மாவட்ட அமைப்பாளர் ரத்தின மாலா சமர்ப்பித்தார். மாநாட்டினை வாழ்த்தி சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன் பேசினார்.சிஐடியு மாநிலச் செயலாளரும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில இணை அமைப்பாளருமான ஐடாஹெலன் நிறைவுரை ஆற்றினார். கலா நன்றியுரை நிகழ்த்தினார். கூட்டுறவு உள்பட பல்வேறு சங்கங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பாளராக ரத்தினமாலா உள்பட 13 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு மற்றும் மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டில், பெண்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம், அங்கன்வாடி உள்ளிட்ட பெண்கள் பணியாற்றுகிற இடங்களில் தனி கழிப்பறை வசதி அமைக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக அவர்கள் பணிபுரியும் இடங்களில் விஷாகா கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.