தஞ்சாவூர், மே 27-தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கும் நிகழ்ச்சி பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி நிகழ்ச்சிக்கு தலைமைவகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு பேசினார்.
ஜூன் 4 பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் ரசீது வழங்கி பேசுகையில், “மத்திய,மாநில அரசுகள் டெல்டா மாவட்டங்களில் ஒரே உரிமத்தில்,ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் உள்ளிட்ட இயற்கை எரிவாயு எடுக்க, வேதாந்தா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் எரிவாயு எடுக்கும் திட்டத்தைரத்து செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரியதண்ணீரை கேட்டு பெறவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்க் கிழமைஅன்று தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் விவசாயிகள், தொழிலாளர்கள், கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்” என்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.குத்புதீன், பி.பெரியண்ணன், எம்.வேலுச்சாமி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.