tamilnadu

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை, ஏப்.8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கில் தந்தை பெரியார் சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின்மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை: அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் பட்டுக்கோட்டை சாலையில் தந்தை பெரியார் சிலை உள்ளது.சமூக நீதியின் அடையாளமாக கம்பீரமாக நிற்கும் இச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக நீதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் பெரியாரின் பிறந்தநாள், நினைவுநாள்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மதவாத பிற்போக்கு சக்திகள் ஞாயிறன்று இரவு பெரியர் சிலையை உடைத்துசேதப்படுத்தி உள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள்முதல் அறந்தாங்கி நகரத்தில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் பெரியாரை அவமானப்படுத்தும் விதமாக பேசியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வந்துள்ளனர். ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதிக்குள்அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி உள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, திருமயம் சட்டமன்றத் தொகுதிகள் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் பிஜேபி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 


மேற்பட்ட இரண்டு தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடையும் நிலையில் உள்ளது. பொதுவாக, அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதியிலும் மண்ணைக் கவ்வும் நிலையில்தான் இருக்கிறது. என்றாலும், பாஜகபோட்டியிடும் தொகுதிகளில் எதிர்ப்பு நிலை மிகக் கடுமையாக உள்ளது. பாஜக வேட்பாளர்கள் வாக்குக் கேட்டுச்செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டெர்லைட், நீட், பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சனைகளை பொதுமக்கள் கேள்விகளாக எழுப்ப அந்த வேட்பாளர்களை நிலைகுலையச் செய்து வருகின்றனர். மேலும், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை தரம்தாழ்ந்து விமர்சித்தும், பெரியாரின் சிலையை உடைப்பேன் என்றும் எச்.ராஜா போன்றவர்கள் கடந்த காலங்களில் விமர்சித்தது மக்கள் மத்தியில் கனலாக எரிந்துகொண்டு இருக்கிறது. இதனால், பாஜக வேட்பாளர்கள் பல இடங்களுக்கு வாக்கு சேகரித்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால், ஏற்பட்ட ஆத்திரம்தான் இச்சிலை உடைப்பு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கருத வேண்டியுள்ளது. சிலை உடைப்பைக் கண்டித்து அரசியல் கட்சிகளும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் திங்கள் கிழமை காலை முதல் உடைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைமுன்பாக போராட்டத்தை நடத்தியுள்ளோம். காவல் துறையோ பெயரளவுக்கு ஒருசிலரைக் கைது செய்து நாடகமாடுவதாகத் தெரிகிறது.எனவே, மாவட்டக் காவல்துறை உண்மைக் குற்றவாளிகளைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சமூக விரோதச் செயல்கள் மேலும் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களைத் திரட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சி எடுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

;