பாட்னா:
பீகார் மாநிலம், பெகுசராய் தொகுதி எம்.பி.யும்,மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், தனது மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டிருந்த போது பிப்ரவரி 14-ஆம்தேதி சாஹேபூர் கமல்என்ற ஊரில் உள்ள அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்தத்தகவலை அறிந்த அப்பகுதியினர், வாளிகளில் தண்ணீரைக் கொண்டு சென்று,உடனடியாக அம்பேத்கர் சிலையைக் கழுவி விட்டுள்ளனர். டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான பாஜக கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கிரிராஜ் சிங், சிலையைத் தொட்டு மாலை அணிவித்ததன் மூலம் அம்பேத்கரை களங்கப்படுத்தி விட்டதாக கூறி, இவ்வாறு செய்துள்ளனர். ‘ஜெய் பீம்’ முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். இந்நிலையில், “பாபாசாகேப் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த கிரிராஜ் சிங்குக்கு அனைத்து உரிமையும் உண்டு. சிலையை சுத்திகரித்ததற்காக கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆர்ஜேடி கட்சியினர் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றுபாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் கொதித்துள்ளார்.