tamilnadu

img

ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறுக!

குடவாசல், ஜூன் 30-  தமிழ்நாடு அறிவியல் இயக்க த்தின் திருவாரூர் மாவட்டம் சார்பில் வலங்கைமானில் புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் யு.எஸ்.பொன்முடி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் முன்னிலை வகித்தார். குருகத்தி ஆசிரிய பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் பிரபாகரன் வரவேற்றார்.  கருத்தரங்கில், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளிலும் இந்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மொழிபெயர்த்து மத்திய அரசே அதிகாரப்பூர்வமாக உடனடியாக வெளியிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை வரைவின் மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். தமிழக அரசு சட்டப் பேரவைவைக் கூட்டி தேசிய கல்விக் கொள்கையின் வரைவு குறித்து விவாதிக்க வேண்டும். உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி என பல துறைகளிலும் உள்ள கல்வியாளர்களை அழைத்து இந்த வரைவு அறிக்கை பற்றிய மிக விரிவான விவாதம் நடத்த வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமையைப் பறிக்கக் கூடிய, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக்கு எதிரான, கல்வி முழுமையாக வணிக மயமாக்குகிற இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப் பெறப்பட வேண்டும். இந்தியப் பன்முகப் பண்பாட்டிற்கு எதிரான இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்வி முறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள 484 பக்க வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் யாவும் கிராமப்புற மாணவர்களை பெரும் அளவு பாதிக்கும் இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் பூ.விஜய் நன்றி கூறினார்.