tamilnadu

ரயில் டிக்கெட் முன்பதிவில் மோசடி செய்த நபர் கைது

சென்னை, ஜூன் 30 சென்னையில் இருந்து வட மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கணினி மென்பொருளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் 24 தட்கல் டிக்கெட்டுக்கள் வரை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்று வந்த மோசடி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் பாய் பாய் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தை தீபக் சிட்டாங்கே என்பவர்  நடத்தி வந்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிரே 20 க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்பல்லோ மருத்துவமனைக்கு மேற்கு வங்கம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் வந்துசெல்கின்றர். இவர்களில் அவசரமாக ஊர் திரும்பும் வசதி படைத்த பயணிகளை குறிவைத்து இந்த மோசடி நடந்துள்ளது. இங்குள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை அனுகினால் போதும் அவர்களுக்கு இரு மடங்கு கட்டணத்தில் தட்கல் ரயில் டிக்கெட் கிடைத்து விடும். கடந்த ஒன்றரை வருடங்களாக இதனை முழு நேர வேலையாக செய்து வந்தவர் தான் பாய் பாய் டிராவல்ஸ் உரிமையாளர் தீபக். இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படையின் ஊழல் கண்காணிப்பு பிரிவுக்கு புகார்கள் குவிந்ததால், போலீசார் சனிக்கிழமை டிக்கெட் வங்குவது போன்று பேச்சுக்கொடுத்து அவரை சுற்றிவளைத்தனர். மேலும் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது மேலும் பல திடுக்கிடும் ஆதாரங்கள் சிக்கியது ANMS என்ற கணினி மென்பொருளை தனது லேப் டாப்பில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள தீபக், அந்த மென்பொருளை பயன்படுத்துவோர் குழுமத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார். மாதம் 2500 ரூபாய் உறுப்பினர் கட்டணமாக செலுத்தி அந்த மென் பொருளை பயன் படுத்தி ஆன்லைன் மூலம் அதிவேகத்தில் தட்கல் ரயில் டிக்கட்டுகளை குறுக்கு வழியில் இடை மறித்து முன்பதிவு செய்து வந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது டிக்கெட் கேட்டு வரும் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு உரிய கட்டணத்தை வசூலித்துக் கொண்டு அனைத்து விவரங்களையும் பெற்றுவிடும் தீபக், தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக ரயில்வே இணையதளமான ஐ.ஆர்.சி.டி,சியில் அனைவரின் பெயருக்கும் தனித், தனியாக டிக்கெட் போர்ட்டல் தயார் செய்து வைத்துக் கொள்வார். முன்பதிவு தொடங்கிய 1 நிமிடத்தில் இவர் விண்ணப்பித்த பயணிகளுக்கு மட்டும் விரைவாக பயண சீட்டு ஒப்புதல் கிடைத்து விடும். அந்த பயண சீட்டுக்களை இரு மடங்கு விலைக்கு சம்பந்தப்பட்ட பயணிகளிடம் விற்பனை செய்து விடுவார். அந்தவகையில் அண்மையில் இவர் 5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 141 டிக்கெட்டுகளை விற்றிருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் அவர் முன்பதிவு செய்து கையில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 பயணச்சீட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தீபக்கின் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட மென்பொருளுடன் கூடிய லேப் டாப், பிரிண்டர், செல்போன் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தீபக்கை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தீபக் போல சென்னையில் பலர் மோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டும் பயணிகள் அனைத்து டிராவல்ஸ் நிறுவனங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

;