tamilnadu

img

திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் தூக்கிட்டு இறந்த சம்பவம்

காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 12- தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் அருகே, திருட்டு வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணையின் போது தப்பிச் சென்ற மணி என்பவர் தூக்கிடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரை காவல்துறையினர் கொலை செய்து, தூக்கில் மாட்டி விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன், தஞ்சை ஒன்றியத் தலைவர் கருப்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யச் செயலாளர் எம்.மாலதி, மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த சாமி ஆகியோர், தஞ்சை ஒன்றியம், இராமநாத புரம் ஊராட்சி வனதுர்கா நகரில் உயிரிழந்த மணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.  பின்னர் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி யைச் சேர்ந்தவர்களிடம் நடந்த விபரங்களைக் கேட்டறிந்தனர். கள ஆய்வுக்கு பிறகு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் தெரிவித்ததாவது, பொன்னுச்சாமி என்பவரது மகன் மணி (வயது 43) இவரது மனைவி மலர் (39), இவர்களுக்கு சூர்யா (24) ரஞ்சித் (21) என்ற இரு மகன்கள் உள்ளனர். 

சந்தேக மரணம்

திருட்டு வழக்கு தொடர்பாக மணியைத் தேடிச் சென்ற காவல்துறையினர், அவரது மகன் ரஞ்சித்தை அழைத்துச் சென்று ரிமாண்ட் செய்துள்ளனர். புதன்கிழமை காலை பரமசிவம் என்பவர் வீட்டில், மணி, செல்வம், கணேசன், மூர்த்தி ஆகியோர் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அங்கு சென்ற காவல்துறையினர் மணி, செல்வம் ஆகியோரை மடக்கிப் பிடித்துள்ளனர். அப்போது, திமிறிய மணியை, ஒரு காவலர் அங்கிருந்த கூடை பின்னும் கத்தியை எடுத்து குத்தி உள்ளார். மணி முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது.  மறுபடியும் அந்த காவலர் கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதில், மணி விலகிக் கொள்ள கத்திக்குத்து அருகில் இருந்த காவலர் கௌத மனுக்கு விழுந்துள்ளது. இதில் காவலர்க ளுக்கிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் மணி அங்கிருந்து தப்பிச் சென்று, ரெட்டிப்பாளையம் பகுதியில் தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மணியின் மனைவி மலர் தேடிச் சென்ற போது, அங்கிருந்த மரத்தில் தூக்குப் போட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். திருட்டு சம்பவத்தில் மணிக்கு தொடர்பு இல்லை என அவரது மனைவி மறுத்து விட்டார். மணியை காவல்துறையினர் தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் எனவும் மணியின் மனைவி கூறுகிறார். 

வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு போடுக

நாங்கள் நடத்திய கள ஆய்வில் மணியின் மரணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முறையாக விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறையி னர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்ற மிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.  இந்நிலையில் இறந்த மணியின் உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் எம்.சின்னத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமே கம், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்த ராஜூ, தேசிய குறிஞ்சியர் மக்கள் நலப் பேரவை மாநிலப் பொருளாளர் முருகேசன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் நேரில் சென்று விசாரித்தறிந்தனர். 

மாவட்ட நிர்வாகம், காவல்துறை உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை கண்கா ணிப்பாளர் நேரடியாக வர வேண்டும். இல்லை யென்றால் உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என குடும்பத்தினர் கூறினர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து உறவினர்கள் மற்றும் தீஒமு நிர்வாகிகள், மற்றும் அமைப்புகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதில், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு அரசு வேலை வழங்க வேண்டும். திருட்டு வழக்குகளில் குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றவாளியாக்கும் போக்கு தவறானது. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தினர் மீதான காவல்துறை அத்துமீறல் தடுக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அம்மக்களின் மேம்பாட்டிற்கு உதவ வேண்டும். குற்ற வழக்குகளில் இந்த அதிகாரிகள் முன்னிலையில் தான் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.  இதுகுறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து, மணியின் உடலை உடற்கூறாய்வு செய்ய உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

 

;