திருச்சிராப்பள்ளி, ஜூன் 7- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது, நாடு முழுவதும் 727 இடங்களில் குழந்தை உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை வரும் ஜூன் 21 முதல் விசாரிக்க உள்ளோம். தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி ஆகிய 10 மாவட்டங்களில் இத்தகைய விசாரணைகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் மீடியாக்கள் மூலம் செய்திகளின் அடிப்படையில் 83 புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதில் 39 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குழந்தை உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை வழக்காக பதிவு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கவும், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரைவு திட்டமாக தற்போது உள்ளது. செயல்திட்டமாக வரும் போது அவை எந்தந்த பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படும் என்றார்.