tamilnadu

img

தரமற்ற கட்டுமானப் பணியால் துறையூர் மாணவியர் விடுதி கட்டடத்தில் விபத்து

திருச்சிராப்பள்ளி, மே 7-திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதி கட்டிடம் சேதமடைந்து இருந்தால் விபத்து ஏதும் ஏற்படும் முன் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டவலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து கடந்தாண்டு இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிய விடுதிக்கான கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கட்டிடம் தரமற்ற பொருட்களை கொண்டு கட்டப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் திங்களன்று விடுதியின் முதல் தளத்தில் கட்டுமான பணியில் கண்ணனூர் சமத்துவபுரத்தை சேர்ந்த கொத்தனார் மணிபாரதி(42) மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப் போது எதிர்பாராதவிதமாக சுவர்இடிந்து விழுந்தது. இதில் மணிபாரதி, துறையூர் நத்தகாடு விநாயகர் தெருவை சேர்ந்த சங்கீதா(32)ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காகதுறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிபாரதி இறந்தார். 

இதைதொடர்ந்து விடுதி கட்டிடம் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டு வருகிறது என்பதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்போ தெரியப்படுத்தியும் அதிகாரிகள் அதனை கண்டுக் கொள்ளாததால் தான் இந்த விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளின் மெத்தனபோக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறையூர்ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் திங்களன்று இரவு துறையூர்- திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்துசென்றனர்.

இந்நிலையில் தரமற்ற பொருட் களை கொண்டு மாணவியர் விடுதியை கட்டிய ஒப்பந்ததாரரை 24 மணிநேரத்திற்குள் கைது செய்யவேண்டும். கட்டுமான பணியின் தரத்தை ஆய்வு செய்ய தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யவேண்டும். கட்டுமான பணியின் போது இறந்த கொத்தனார் மணிபாரதி குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம் வழங்க வேண்டும். காயமடைந்த சங்கீதாவிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ் தலைமையில் பொதுமக்கள் செவ்வாய் அன்று காலை துறையூர்- திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பின்னர் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் கட்சியின் புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ். துறையூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், காசிராஜன், தங்கவேல், பொன்னுசாமி, பார்வதிஅம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், பாக்கியராஜ், கமலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

;