tamilnadu

முதல்வர் வருகையையொட்டி திமுகவினர் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

கரூர், மே 5-கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புஞ்சை காளக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்னிலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொள்ளும் செயல் வீரர்கள் கூட்டம் தென்னிலையில் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே போல பரமத்தி ஒன்றிய பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் நிகழ்ச்சி இருக்கிறது. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு வருகிறார் என்ற காரணத்தை காட்டி அனுமதி மறுத்துள்ளனர்.இதன் காரணமாக அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் பிரச்சாரம் செய்து கொள்ள அனுமதி கேட்டும், அதற்கும் அனுமதி மறுத்து விட்டனர். எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய வரும் நாளில் எந்த கட்சிகளும் பிரச்சாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையமும், போலீசாரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அராஜக போக்கை மேற்கொண்டு வருகின்றனர். எங்களது உரிமையை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியின் அராஜக செயலுக்கு துணையாக தேர்தல் ஆணையமும், காவல்துறையும் செயல்பட்டு வருகிறது.அரவக்குறிச்சி தொகுதியில் வீட்டுமனை இல்லாத 25 ஆயிரம் பேருக்கு தலா மூன்று சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும். இந்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவேன். நிறைவேற்றாவிட்டால் என்னை ஊர் மந்தையில் உட்கார வைத்து கேளுங்கள் என்றார். பேட்டியின் போது கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர். 

;