tamilnadu

கல்லூரி தேர்வில் காப்பியடிக்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்டவர் பணி நீக்கம்

தஞ்சாவூர்,ஜூன்.15–  தமிழ் பல்கலைக்கழக பி.எட்., தொலைதூரக் கல்வி தேர்வில், காப்பியடிக்க 5 ஆயிரம் ரூபாய் வரை மாணவர்களிடம், லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், உதவி பேராசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வு கடந்த மே 15 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்றில், நடைபெற்ற தேர்விற்கு, கண்காணிப்பு அலுவலராக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் உதவி பேராசிரியரான முத்தையன்(56), நியமிக்கப்பட்டு, அந்த பணிக்கு சென்றுள்ளார். சுமார் 200 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதிய நிலையில், 'ஒவ்வொரு மாணவரும் 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், தேர்வில் காப்பி அடித்து கொள்ளலாம்' என முத்தையன் தொலைநிலைக் கல்வி நிர்வாகிகளிடமும், மாணவர்களிடமும் கூறியுள்ளார். இதற்கு மாணவர்கள் மற்றும் நிர்வாகம் மறுத்து விட்டனராம்.  இதனால் ஆத்திரமடைந்த முத்தையன், தேர்வு எழுதும் போது  செக்கிங் என்ற பெயரில், மாணவிகளிடமும் சில்மிசம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தொலைநிலைக் கல்வி நிர்வாகத்தினர், தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியனுக்கு புகாராக அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் குழு ஒன்றை அமைத்தார். அக்குழுவினர் நடத்திய விசாரணையில் இவை அனைத்தும் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகவும், மேலும் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அறிக்கையை கொடுத்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை உதவிப் பேராசிரியர் முத்தையனை இடைநீக்கம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டார். தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 38 ஆண்டுகளில் லஞ்சப் புகாரில் உதவி பேராசிரியர் ஒருவர் சிக்கி, முதல் முறையாக இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் கூறியதாவது; உதவி பேராசிரியர் முத்தையன் மீது புகார் எழுந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.