tamilnadu

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி

கரூர், ஏப்.24-கரூர் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி தனது வேட்பு மனுவை புதன்கிழமை தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் தாக்கல் செய்தார்.அப்போது முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, கரூர்மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக அரவக்குறிச்சியில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டிருந்த காமராஜ் நகரில் தேர்தல் பணிமனை திறப்பு விழா முடிந்த பின் ஊர்வலமாக அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொகுதி திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி தலைமையில் ஊர்வலமாக அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மனுத்தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறுகையில், அரவக்குறிச்சி தொகுதி உள்பட நான்கு தொகுதிகளிலும் உடனடியாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்என நீதிமன்றத்தில் முறையிட்டு, பின்னர் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்ட பின் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த தொகுதி வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறுகையில், அரவக்குறிச்சி தொகுதியில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் ஒரே ஒரு அறையில் மூன்று குடும்பங்கள் குடியிருக்கின்றனர். இதை உணர்ந்து சுமார் 25,000 குடும்பத்திற்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக தேர்தல்அறிக்கையில் கூறியுள்ளோம். அரவக்குறிச்சி, க.பரமத்திபகுதிக்கு புதிய காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும். காவிரியில் புகழூர், அமராவதி ஆற்றில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்டப்படும். அரவக்குறிச்சி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப் படும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறையாக ஊதியம்கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 


சொத்து விபரம்


திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியின் சொத்துவிவரம்: அசையும் சொத்து: செந்தில்பாலாஜி பெயரில் ரூ.80,59,127. மனைவி எஸ்.மேகலா பெயரில் ரூ.61,43,371.மகள் எஸ்.நந்தினி பெயரில் ரூ.9,00,504. அசையா சொத்து: செந்தில்பாலாஜி பெயரில் ரூ.1.10 கோடி.

;