நாரதர் கொண்டு வந்த ஞானப்பழ த்தை அடைவதற்கு போட்டி நடந்தது. நிபந்தனைக்கு உட்பட்டு உலகை வலம் வந்த முருகனுக்கு ஞானப்பழம் கிடைக்கவில்லை. ஆனால் நிபந்தனைக்கு விரோதமாக அம்மை அப்பனைச் சுற்றி வந்த விநாயகனுக்கு ஞானப்பழம் கிடைத்து. உலகம் முழுவதும் சுற்றி வந்த உழைப்பிற்கு உரிய பலன் இல்லை. உட்கார்ந்த இடத்திலேயே ஞானப்பழத்தை விநாயகன் சுருட்டிக் கொண்டது நேர்மையற்ற செயல் எனக் குற்றம் சாட்டிய முருகன் கோபம் கொண்டு குடியேறிய இடம்,பழனி மலை. முருகன் முற்றும் துறந்த மொட்டை ஆண்டியாக குடியேறி னான் என்பது புராணம்.மூன்றாம் படைவீடான பழனியில், மொட்டை ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்துவதை நியதியாகக் கொண்டுள்ளனர். திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிகம் மொட்டையடிக்கும் இடமான பழனி யில் மொட்டை அடிக்கும் சிகைத் தொழிலாளிகளின் நிலை தான் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சிகைத் தொழிலாளிகள் இறக்கு கிற முடியால் கோவில் நிர்வாகம் வருடம் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருமானம் பெறுகிறது. ஆனால் சிகைத் தொழிலாளிகளோ, வாழ்வ தற்கான அடிப்படை வசதிகள் இன்றி வறுமையில் வாடுகின்றனர். அவ ர்கள் கடந்த வந்த பாதை கற்களும், முட்களும் நிறைந்ததாக உள்ளது. ஏறக்குறைய நூறு ஆண்டு களுக்கு முன்னர் முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் எந்த ஒரு வசதியும் செய்யவில்லை.
பழனி மலையைச் சுற்றி புண்ணிய தீர்த்த ங்களாக கருதப்படும் சண்முகநதி சரவணப்பொய்கை, இடும்பன்குளம் வையாபுரிக் குளம், வாய்க்கால்மேடு முதலான இடங்களில் வைத்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் முடி இறக்கும் பணியை சிகைத்தொழிலாளிகள் சேவை மனப்பான்மையுடன் செய்து வந்தனர். அதற்குப்பின்னர் முடிக்காணிக்கை செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே கோவில் நிர்வாகம், வருமானம் அடையும் நோக்கத்துடன் முடி இறக்கும் தொழிலை தன் வசப்படு த்திக்கொண்டது. முடிக்கொட்டகை அமைத்து சிகைத்தொழிலாளிகள் மத்தியில் மொட்டை அடிக்கும் தொழிலை ஒவ்வொரு நாளும் ஏலம்விட்டது. அதிகபட்ச தொகையைக் கட்டி எடுக்கும் சிகைத்தொழிலாளிகள் அன்றைய நாளுக்கு உரிய முடிக்காணிக்கை டிக்கெட்டுகளை விற்று முடியையும் சேகரித்துக்கொள்வார்கள். ஆனால் எல்லா நாட்களும் ஒன்றுபோல் இருக்காது. ஏலம் எடுத்த சிகை த்தொழிலாளிகளுக்கு லாபம் கிடை க்கும் என நிச்சயமாகச்சொல்ல முடியாது. எனவே வருடம் ஒருமுறை ஏலம் விடுமாறு சிகைத் தொழிலாளி கள் கோரிக்கை வைத்து கோவில் நிர்வாகத்தை வற்புறுத்தி வந்தனர். அதன் விளைவாக நிர்வாகமும் வருடக் குத்தகைக்கு விட்டபொழுது, தொழிலாளிகளால் அதிகத் தொகை கட்டி ஏலத்தில் எடுக்க முடிய வில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, சென்னை யைச் சேர்ந்த பாலநாயுடு என்பவர், தொழிலாளிகளின் பெயரால், வருடத்திற்கு பத்தாயிரம், இருப தாயிரம் எனக் கட்டி ஏலம் எடு ப்பார். முடியின் மதிப்பும், பய ன்பாடும் தெரிந்த பாலநாயுடு அதை வெளிநாடுகளில் விற்று லட்சக்க ணக்கில் பணம் சம்பாதித்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் பங்கு த்தொகை என அப்பொழுதிருந்த சிகைத்தொழிலாளிகள் 70 பேருக்கு கிடைத்த தொகையோ அணாக் கணக்கில்தான். கடந்த 1966 ஆம் ஆண்டுவாக்கில் பெண் பக்தர்களின் நீளமான முடிக்கு நல்லமதிப்பு இருந்ததால், ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் கோவில் நிர்வாகத்திடம் வருடம் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் செலுத்தி, முடியைச் சேகரிக்கும் உரிமையைப் பெற்றது. அதுவரை தொழிலாளிகளால் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடத்தி வரப்பட்ட முடி எடுக்கும் தொழில், முதன்முறையாக ஒரு நிறுவனத்திடம் கை மாறியது. இதற்கிடையே தொழிலாளிகள் பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே நிலையம் என அலைந்து திரிந்து பக்தர்களை அழைத்து வந்த காலம் போய், அந்தந்த துறவழிகளில் (முடி எடுக்கும் இடம்) தொழிலாளிகள் வரிசையில் காத்திருந்து முடி எடுக்கும் முறை வந்தது. மேலும் முடியை சேகரிக்க முடியாத எஸ்டிசி நிறுவனம் குறைந்த கூலித் தொகைக்கு, தொழிலாளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் தொழிலாளிகளில் ஒரு பிரிவினர் குறைந்த கூலி ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.
இதனால் எஸ்டிசி நிறுவனம், அதற்கு ஆதரவான தொழிலாளிகளுடன் சோந்து கோவில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவுத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை 120 பேராக உயர்த்தியது; எஸ்டிசி நிறுவனம் கூலியாக வருடம் ஒரு முறை கொடுக்கும் ரூ.1.1 முதல் 4 லட்சம் ரூபாயை 120 தொழிலாளிகள் பகிர்ந்து கொண்டனர். இதற்கிடையே காங்கிரஸ் ஆட்சி முடிந்து, தி.மு.க.ஆட்சி வந்தது. கோவில் நிர்வாகத்தை எதிர்த்த பிரிவினருக்கு மீண்டும் பணியாற்ற அனுமதி கிடைத்தது. இப்பிரிவினரும் அவர்களைச் சோந்தவர்களுமாக பணிக்குச்சோந்ததில் இரு பிரிவினரும் சேர்ந்து மொத்தம் 430 தொழிலாளிகள் உரிமச் சீட்டின் பேரில் பணிபுரிந்து வந்தனர். இதில் உடல்நலன் பாதிக்கப்பட்டு வெளியேறியவர்கள், இறந்து போனவர்கள் என 100 இடம் காலியானது. காலியான இடங்களில் புதிதாக ஆட்களை நியமிக்க கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் தொழிலாளிகளின் எண்ணிக்கை 330 ஆக குறைந்தது. இந்நிலையில் கடந்த 1984 ஆம் வருடம், நோயுற்றவர்கள், வேலை செய்யமுடியாதவர்கள் என மேலும் 54 தொழிலாளிகளை பணிநீக்கம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. சிகைத்தொழிலாளர் சங்க (சிஐடியு) தலைவர் வி.டி.சேகர் தலைமையில் 54 தொழிலாளிகளும், தேவஸ்தான முடிக் கொட்டகைக்கு எதிராக சரவணப்பொய்கை அருகே போட்டி முடிக்கொட்டகையை ஆரம்பிக்க அதிரடியாக முடிவெடுத்தனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அப்பொழுது பழனி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த தோழர் என்.பழனிவேல் அவர்களும் பக்கபலமாக இரு ந்தனர்.
சிஐடியு சங்கம் “ஒரு நபருக்கு ஒரு நபர்” என நியமனம் செய்யவேண்டும் என சிகைத் தொழிலாளர்களுக்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. அதைத் தொடர்ந்து அப்பொழுது கோவில் தக்கார் ஆக இருந்த ராதா தியாகராஜன், மற்றும் தோழர் என்.பழனிவேல் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. அப்பொழுதிருந்து உடல்நோய் மற்றும் வயது மூப்பின் காரணமாக விலகும் தொழிலாளிக்குப் பதிலாக அவர் விரும்பும் தகுதியுள்ள தொழிலாளியை கோவில் நிர்வாகம் நியமித்து உரிமச் சீட்டு வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டு காலமாக, கோவில் நிர்வாகம் ஒரு நபருக்கு ஒரு நபர் என்ற நியமன முறையை தொழி லாளிகளின் உரிமையை நிறுத்தி வைத்தது. இறுதியாக அனைத்து தொழிலாளிகளும் கட்சி, சங்க வேறுபாடுகளைக் கடந்து சிஐடியுவின் தலைமையில் ஒன்றுபட்டு போராட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினர். இதனால் நெருக்கடிக்கு ஆளான கோவில் நிர்வாகம், போராட்டத் தேதிக்கு முதல் நாளான 13-10-2015ம் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. நகர்மன்ற முன்னாள் தலைவர் வ.இராஜமாணிக்கம் தலைமையில் கட்சியின் நகர குழு செயலாளர் குருசாமி சிஐடியு சங்க தலைவர்கள் பிச்சைமுத்து, பேரா.எஸ்.மோகனா, மனோகரன், நாட்ராயன், நாகராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு சங்கத்தின் கோரிக்கையை எவ்வித சமரசமும் இன்றி ஏற்க வைத்தனர். கோவில் நிர்வாகத்திடம் இருந்து ஒரே நாளில் 20 பேருக்கு பணிபுரிய உரிம உத்தரவை சிஐடியு பெற்றுத்தந்தது. இதனால் சிகைத் தொழிலாளிகளின் மத்தியில் புதிய நம்பிக்கையும், புத்தெழுச்சியும் ஏற்பட்டது.
இன்று வரை சிகைத்தொழிலாளி களுக்கு மாத ஊதியம் கிடையாது. பணிநிரந்தரம் கிடையாது. ஓய்வூதியப்பணி நலன்களோ, பணப்பயன்களோ கிடையாது. தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு சொந்தமாக வீடு கிடையாது. கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. ஒரு காலத்தில் அணாக் கணக்கில் கிடைத்த கூலி, இப்பொழுது ஒரு முடிக்காணிக்கை டிக்கெட்டுக்கு ரூ.5--என வழங்கப்படுகிறது. குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து காரியங்களுக்கும், கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலையே உள்ளது. இதற்கிடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தை போராட்டங்களின் விளைவாக, டிக்கெட்டுக்கு ரூ.25--என கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சிகள் மாறியபோதும், சிகைத் தொழிலாளி களின் வறுமைப்பட்ட வாழ்க்கையில் காட்சிகள் மாறவில்லை. முடியோடு பழனிமலைக்கு வந்த முருகன் மொட்டை ஆண்டியாக மாறினான் என்பது உண்மையானால் அவனுக்கு மொட்டை அடித்தது கண்டிப்பாக ஒரு சிகைத் தொழிலாளியாகத் தான் இருக்கவேண்டும். முருக னின் வரலாறோடு பின்னிப் பிணைந்த சிகைத் தொழிலாளியை அத்துக்கூலிக்கும் கேவலமாக கோவில் நிர்வாகமும், தமிழக அரசும் நடத்துகின்றன. பழனி முருகன் கூட ராஜ அலங்கா ரத்துடன் காட்சி அளிக்கிறான். ஆனால் அவனை நம்பி இருக்கும் சிகைத்தொழிலாளிகள் மொட்டை ஆண்டிகளாகத்தான் இன்று வரை உள்ளனர். முருகன் கருணை காட்டுவானோ, அல்லது ஆட்சியாளர்கள் ஆதரிப்பாரோ என்ற எதிர்பார்ப்புகள் மாறிப்போய் இப்பொழுது சிகைத்தொழி லாளர்களின் கோரி க்கைகளை வென்றெடுக்கும் நம்பி க்கை நட்சத்திரமாக, சிஐடியு சங்கம் விளங்குகிறது. அது தொழிலா ளர்களின் வாழ்க்கையில் இருளைக் களைந்து ஒளியை ஏற்ற வரும் அக்டோபர் 3 (இன்று) கோரிக்கை மனு இயக்கம் நடத்த உள்ளது.
வ.இராஜமாணிக்கம் முன்னாள் நகர் மன்றத் தலைவர், பழனி.