tamilnadu

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தருமபுரி, ஏப்.4-

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டாளம்மன்கோயில், பெருமாள் கோயில்மேடு, முத்துமாரியம்மன் தெரு, சத்யாநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஒருநாள் விட்டு ஒருநாள் ஒகேனக்கல் குடிநீர் வழங்கி வந்தநிலையில் கடந்த 15 தினங்களாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் வெளி இடங்களுக்கு சென்று குடிநீர் எடுத்துவந்தனர். மேலும் பலர் குடிநீரை விலைக்குவாங்கி பயன்படுத்திவந்தனர். முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தடங்கம் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆவேசம் அடைந்த அப்பகுதி பெண்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சேலம் -தருமபுரி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த நல்லம்பள்ளி வட்டாட்சியர் இளஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பெண்களிடம் உறுதியளித்ததின் அடிப்படையில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;